இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரும் அரசியலில் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் இன்று தனது 42-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலககோப்பை தொடரை வென்று அசத்தியது. அதன்பிறகு இந்திய அணிக்கு உலககோப்பை எட்டாக்கனியாகவே இருந்தபோது 2007-ம் ஆண்டு முதல் முறையாக தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி மகுடம் சூடியது. இந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர் கவுதம் கம்பீர்.
அடுத்து 4 வருடங்கள் கழித்து இந்தியா இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடந்த ஒருநாள் தொடர் உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தோனி தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலககோப்பை தொடரை வென்றது. இந்த போட்டியில் அரைசதம் அடித்து அதிக ரன்கள் குவித்த கவுதம் கம்பீர் இந்திய அணி 2 உலககோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பிறப்பு மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை
புதுடெல்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த கவுதம் கம்பீர், பிறந்து 18 நாட்களில் அவரது தாய்வழி தாத்தா பாட்டி ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டு அவர்களுடன் வளர்ந்துள்ளார். இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார். இவரை விட 2 வயது இளையவர். புதுடெல்லியில் மாடர்ன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த கம்பீர் 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அதே சமயம் பள்ளிப்படிப்பை முடித்து அவர் பட்டப்படிப்புக்காக கல்லுரி செல்லவில்லை.
90-களில் தனது மாமா பவன் குலாட்டி வீட்டில் தங்கியிருந்த கம்பீர் அவரை தனது வழிகாட்டிகளில் ஒருவராக நினைத்துக்கொண்டார். பட்டபடிப்புக்கு செல்லாத கம்பீர், டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். இங்கு சஞ்சய் பரத்வாஜ், ராஜு டாண்டன் ஆகியோர் இவருக்கு பயிற்சி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்டார் கம்பீர்.
முதல் சர்வதேச போட்டி
2003-ம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கவுதம் கம்பீர் அறிமுகமானார். இந்த போட்டியில் 115 பந்துகளை சந்தித்த கம்பீர் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் களம் கண்டார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் கடைசி போட்டியில் சேவாக்குடன் தொடக்க வீரராக களமிறங்கிய கம்பீர் முதல் இன்னிங்சில் 3 ரன்களும், 2-வது இன்னிங்சில் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்.
கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான காலக்கட்டத்தில் தொடக்க வீரர்களாக சச்சின் கங்குலி, சேவாக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இருந்தனர். இதனால் கம்பீருக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2005-07-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். ஆனாலும் 2007-ம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலை கம்பீருக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்தது.
ஆனாலும் தனக்கு கிரிக்கெட் தான் வாழ்க்கை என்பதை அறிந்துகொண்ட கம்பீர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டார். அதன்பிறகு 2007-ம் ஆண்டு வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட கம்பீர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் களமிறங்கினார். இதில் முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார் கம்பீர்.
டி20 உலககோப்பை இறுதிப்போட்டி
தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 2007-ம் ஆண்டு தொடங்கிய முதல் டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட கம்பீர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 54 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும், தோனியின் கேப்டன்சி காரணமாக பாகிஸ்தான் அணியை 152 ரன்களில் வீழ்த்தி 5 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 உலககோப்பை தொடரை இந்தியா வென்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியா சார்பாக கம்பீர் மட்டுமே அதிக ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 227 ரன்களுடன் கம்பீர் 2-வது இடம் பிடித்திருந்தார்.
ஒருநாள் உலககோப்பை தொடர்
அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலககோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கம்பீர், சிறப்பாக விளையாடி அசத்திய நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், 122 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து 3 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பினை இழந்தாலும், இந்திய அணி இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் குவித்தவர் கம்பீர் தான். அதேபோல் இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 393 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கம்பீர் 6-வது இடத்தை பிடித்திருந்தார். ஒருநாள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தனது தனித்தன்மையுடன் விளையாடிய கம்பீர், 3 வகையாக கிரிக்கெட் போட்டிகளிலுமே தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்குடன் இணைந்து ரன்களை குவித்துள்ளார்.
2010-ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வாதரோவில் நடைபெற்ற 3-வது போட்டிகளில் 126 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கம்பீர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதில் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்த கம்பீர் 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஐபிஎல் பயணம்
டி20 உலககோப்பை தொடர் முடிந்து அடுத்த வருடம் (2008) இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இதில்’ முதல் சீசனில் டெல்லி அணிக்காக களமிறங்கிய கம்பீர், அந்த தொடரில் 534 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். தொடர்ந்து 2010-ம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கிய கம்பீர், அடுத்து 2011-ம் ஆண்டு முதல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்ட கம்பீர் 2012 மற்றும் 2014-என இரு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அதன்பிறகு 206-17 சீசனிகளில் கொல்கத்தா அணியை ப்ளேஅப் சுற்றுக்கு அழைத்து சென்ற கம்பீர், 2018-ம் ஆண்டு மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினார். தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய இடத்திலேயே முடிக்க விரும்பிய கம்பீர் கொல்கத்தா அணியில் தன்னை தக்கவைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியானது.
அதன்பிறகு் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கம்பீர், ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது புதிதாக தொடங்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.
கிரிக்கெட் சாதனைகள்
கடந்த 2009-ம் ஆண்டு தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த கம்பீர், தொடர்ச்சியாக 5 சதம் கடந்த ஒரு இந்திய வீரர் என்ற சிறப்பினை பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 2 இலங்கை அணிக்கு எதிரான 2 மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான 1 என தொடர்ந்து 5 சதங்கள் அடித்துள்ள கம்பீர், இந்தியாவுக்கான 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4154 ரன்கள் குவித்துள்ளார். இதில் 206 ரன்கள் எடுத்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். இதில் 9 சதங்களும், 22 அரைசதங்களும் அடங்கும்.
147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர், 5238 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோராக 150 ரன்கள் எடுத்துள்ள இவர், ஒருநாள் போட்டிகளில் 11 சதம், 34 அரைசதம் எடுத்துள்ளார். 37 டி20 போட்டிகளில் விளையாடி, 7 அரைசதங்களுடன் 932 ரன்கள் குவித்துள்ளார். இதில் உலககோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான எடுத்த 75 ரன்களே அவரின் அதிகபட்சமாகும்.
அரசியல் வாழ்க்கை
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற கவுதம் கம்பீர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்பீர் தற்போது எம்.பியாக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.