Tamil Sports Update : தென்ஆப்பிரிக்க அணிக்க எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், முக்கியமான 3 வீரர்களை கவனமாக பார்த்து அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டும் என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
தென்ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடந்த டெஸ்ட்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விலகியதால் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
ஆனால் 3 போட்டிகளிலுமே இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது. இதில் கடைசியாக நடந்த 3-வது போட்டியில் வெற்றியை நெருங்கிய இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் ஒருசில தனிப்பட்ட செயல்பாடுகள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரை கவர்ந்துள்ளது
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட இந்திய அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில், வெங்கடேஷ் அய்யருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தீபக் சாஹரையும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் சேர்க்கப்பட்டனர். இந்த 3 வீரர்களுமே தொடக்கத்தில் இருந்து களத்தில் இருந்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதில் சூர்யகுமார், சாஹர் மற்றும் பிரசித் ஆகிய மூவரும் “நிச்சயமாக. விளையாடிய விதத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் திறமையை நிருபித்துள்ளனர். மேலும் தொடரை இழந்த பிறகு அவர்களுக்கு 3வது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களின் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால் எதிரணியான தென்ஆப்பிரிக்கா தொடரை முழுமையாக கைப்பற்றவதில் மிகவும் ஆர்வமாக இருந்தது அவர்களுக்கு தெரியும்.
இதனால் அவர்கள் மீது அழுத்தம் இருந்தது. ஆனாலும் அவர்கள் நன்றாகவே விளையாடினர். அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை, கடைசி போட்டியில் விளையாடிய சூர்யகுமார், 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார். பிரசித் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையில், 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய சாஹர் ஒரு அற்புதமான அரை சதத்தையும் அடித்தார்.
சாஹரின் தாக்குதல் ஆட்டம் இந்தியாவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இதனால் தென்ஆப்பிரிக்க பயணத்தை இந்தியா வெற்றியுடன் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாஹர், 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து லுங்கி என்கிடி பந்துவீ்சசில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா கடைசி 10 ரன்களில்தடுமாறியது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இவர்கள் மூவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். டக்அவுட்டில் உட்கார வைக்கப்படுவதை விட இப்போது அவர்கள் அணியைச் சேர்ந்தவர்கள். எனவே நிச்சயமாக இந்த மூன்று பெயர்களையும் நீங்கள் எதிர்காலத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “