இந்தியாவில் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் இந்தியாவில் ஹாக்கியை விட கிரிக்கெட் போட்டிக்குதான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்கான விளையாட்டாக மாறிவிட்டது. இந்த போட்டியில் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒரு வீரர் ஜொலித்திருப்பார்.
இப்படி பிரபலமான வீரர்கள் பல போட்டிகளில் விளையாடி பல சதங்கள் அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருப்பார்கள். அதே சமயம் சில வீரர்கள் குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆகாஷ் சோப்ரா 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் பிரபலம்.
பிறப்பு – இந்திய அணியில் அறிமுகம்
1977-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் பிறந்தவர் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணியில் வீரேந்தர் சேவாக்குடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க இந்திய அணி ஒரு சிறந்த வீரரை தேடிக்கொண்டிருந்தபோது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம்
கடந்த 2003-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளுமே டிராவில் முடிந்தாலும் முதல் போட்டியின் முதல் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா 116 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ராகுல் டிராவிட் (222) இரட்டை சதம் கடந்தார். அடுத்து 2-வது இன்னிங்சில், 72 பந்துகளில் 31 ரன்கள் குவித்திருந்தார்.
2 இன்னிங்சிலும் அரைசதம்
அடுத்து தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் கடைசி வீரராக களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா 148 பந்துகளில் 60 ரன்களும், 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களமிறங்கி 160 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தார். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் சோப்ராவுக்கு அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள்
முதல் போட்டிகளில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய சோப்ரா முதல் இன்னிங்சில் 36 ரன்களும், 2-வது இன்னிங்சில் (தொடக்க வீரர்) 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அடுத்து 2-வது போட்டியில், முதல் இன்னிங்சில் கடைசி வீரராக களமிறங்கிய 26 ரன்களும், 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களமிறங்கி 20 ரன்களும் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அடுத்து நடைபெற்ற 3-வது போட்டியில், முதல் இன்னிங்சில் 48 ரன்கள் எடுத்த சோப்ரா, 2-வது இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. 4-வது மற்றும் கடைசி போட்டி டிராவில் முதந்த நிலையில், முதல் இன்னிங்சில் 45 ரன்களும், 2-வது இன்னிங்சில் 2 ரன்களும் எடுத்தார் சோப்ரா.
மிடில் ஆர்டரை வலுப்படுத்திய ஆகாஷ் சோப்ரா
ஆஸ்திரேலியா தொடரில் அதிகமான ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அப்போது முன்னணி வீரர்களாக இருந்த கங்குலி, டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் அதிக ரன்கள் குவிக்க ஒத்துழைப்பு கொடுத்தார். இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சோப்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 675 ரன்கள் குவித்தது. இதில் சேவாக் 309 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் சோப்ரா 42 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டியில் 4 மற்றும் 5 ரன்களில் சோப்ரா வீழ்ந்த நிலையில், காயமடைந்த கங்குலிக்கு பதிலாக களமிறங்கிய யுவராஜ் சிங் சதம் கடந்து அசத்தினார். இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கு கங்குலி திரும்பியதால் சோப்ரா நீக்கப்பட்டார்.
இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட்
இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சோப்ரா டக் அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 5 ரன்களில் வெளியேறினார். இதனால் 2-வது போட்டியில் நீக்கப்பட்ட சோப்ரா 3-வது போட்டியில் களமிறங்கினாலும், 9 மற்றும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் சோப்ரா அதன்பிறகு இந்தியா அணியில் இடம்பெறவில்லை. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா 35 வருடங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை வென்றது.
இந்த போட்டி தொடருக்கு முன்பாக 46.25 இருந்த ஆகாஷ் சோப்ராவன் சராசரி போட்டி முடிவில் 23 ஆக குறைந்தது. அந்த காலக்கட்டத்தில் வாசிம் ஜாபர், கவுதம் கம்பீர், ஆகியோர் டெஸ்ட் அணியில் ஆதிக்கம் செலுத்தியதால் சோப்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் இவரின் மெதுவான ஆட்டம் காரணமாக ஒருநாள் போட்டியிலும் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சோப்ரா, 2 அரைசதத்துடன் 437 ரன்கள் குவித்துள்ளார். தான் விளையாடிய 10 போட்டிகளிலும் அதிகபட்சமாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் கூட தனது ஆட்டத்தின் திறமையை வைத்து பந்துகளை சரியாக எதிர்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டை காப்பாற்றியவர் சோப்ரா. அதேபோல் தன்னை ஒரு சிறந்த க்ளோஸ் ஃபீல்டராகவும் நிரூபித்தவர்.
மீண்டும் இந்திய அணியில் சோப்ரா
2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட சோப்ரா, அடுத்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணியில் இடம்பிடித்த ஆகாஷ் சோப்ரா, இந்த போட்டியில் இரட்டை சதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து 2007-08 காலக்கட்டத்தில் உள்ளூர் தொடரில் ரன்களை குவித்து அசத்திய சோப்ரா, ரஞ்சி கிரிக்கெட் தொடரில் 783 ரன்களும், உள்ளூர் ஒருநாள் தொடரில் 332 ரன்களும், துலிப் டிராபியில் 310 ரன்களும் குவித்து அசத்தினார். உள்ளூர் தொடர்களில் 162 போட்டிகளில் விளையாடியுள்ள சோப்ரா 29 சதம், 53 அரைசதத்துடன் 10839 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் முச்சதம் எடுத்து 301 ரன்களுடன் களத்தில் இருந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வாய்ப்பு
ரஞ்சி தொடரில் அசத்திய சோப்ரா 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர் அணியில் இணைந்தார். 2008 மற்றும் 2009-ம் ஆண்டு கொல்கத்தா அணியில் விளையாடிய சோப்ரா மெதுவாக விளையாடுவதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த அவர் 2015-ம் ஆண்டு அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 21 டி20 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 72 ரன்கள் குவித்துள்ளார்.
தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக மாறியுள்ள ஆகாஷ் சோப்ரா, வீரர்களின் சூழ்நிலை மற்றும் களத்தில் அவர்கள் விளையாடும் தன்மையை கவிதை மூலம் வெளிப்படுத்தக்கூடியவர். அதேபோல் வர்ணனை செய்யும்போது இடையில் பழமொழிகளை கூறி அசத்தக்கூடிய ஆகாஷ் சோப்ரா, கடந்த 2018-19-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 7 நெட்வொர்க்கிற்கு வர்ணனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.