scorecardresearch

தல to ஜட்டு: கேப்டன் பதவி திடீர் மாற்றத்திற்கு ரியாக்ஷன் என்ன?

Tamilnadu Sports Update : களத்தில் தோனி இருப்பதால் ஜடேஜா நிச்சயம் கேப்டன் பதவியை திறம்பட கையாள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

தல to ஜட்டு: கேப்டன் பதவி திடீர் மாற்றத்திற்கு ரியாக்ஷன் என்ன?

IPL Season 15 CSK Captain Change Update : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடருக்கு உலகளவில்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.இதுவரை 14 சீசன்கள் முடிந்துள்ள இந்த தொடரில் தோனி தலைமையில் சென்னை அணி 12 சீசனிகளில் விளையாடியுள்ளது. இதில் 2020- ஐபிஎல் தொடரை தவிர மற்ற அனைத்து தொடர்களிலும் ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே 4 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து கேப்டனை மாற்றாத ஒரே அணி என்ற பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது கேப்டன் மாற்றத்தை சந்தித்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஜடேஜா 16 கோடிக்கு முதல் வீரராகவும், தோனி 12 கோடிக்கு 2-வது வீரராகவும், மொயின் அலி மற்றும் ருத்துராஜ் அடுத்தடுத்து வீரர்களாகவும் தக்கவைக்கப்பட்டனர்.

இதில் தற்போது 40 வயதை கடந்துள்ள தோனி இன்னும் 3 சீசனுக்கு சென்னை அணியில் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். அதன்படி தோனி தலைமையில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது திடீரென தோனி தனது கேப்டன் பதவியை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

2012-ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, அணியின் இக்கட்டான சூழ்நிலையில் பெரிய ஷாட் அடித்து பல போட்டிகளில் வெற்றிக்கு உதவியுள்ளார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்து வருகிறார். மேலும் அவர் ஒரு பந்துவீச்சாளர் என்பதால், பேட்ஸ்மேன்களில் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று கணிக்கும் திறமை கொண்டுள்ளவர்.

இதனால் அவர் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படுவார் என்று பலரும் கூறிவரும் நிலையில், தோனியே இந்த சீசனிலும் கேப்டன் பதவியில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பதே தோனியின் தீவிர ரசிகர்களின் கூற்றாக உள்ளது. சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த கேப்டனை உருவாக்கும் முயற்சியில் தோனிமற்றும் அணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதிலும் சர்வதேச அளவில் பல வெற்றிகளை சொந்தமாக்கிய கூல் கேப்டன் தோனி அணியில் இருக்கும்போதே அந்த வேலையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், நடப்பு சீசனில் தோனி ஒரு சாதாரண வீரராகவும், ஜடேஜா கேப்டனாகவும் களமிறங்க உள்ளனர். நடப்பு தொடரில் ஆட்ட நுனுக்கங்கள், இக்கட்டான நிலையில், பீல்டிங் நிறுத்துவது எப்படி என்பது உள்ளிட்ட பல ஐடியாக்களை தோனி ஜடேஜாவுக்கு வழங்க உள்ளார்.

ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் வார்னேவால் ராகஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர். தற்போது பந்துவீச்சு பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி மற்றொரு கவுரவமாக அமைந்துள்ளது. மேலும் நெருக்கடிகளை கையாள்வதில் ஓரளவு கைதேர்ந்த ஜடேஜாவுக்கு களத்தில் தோனி இருப்பது கூடுதல் பலமாகும்.

15 வருடங்களாக தோனியே சிஎஸ்கே அணியின் கேப்டனாக பார்த்து பழகிய ரசிகர்களுக்கு தற்போது ஜடேஜாவின் கேப்டன்சி சற்று அதிர்ச்சி அளித்தாலும் ஜடேஜாவுக்கென தனியான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர் அணியை நிச்சயம் சரியான முறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை தனது அதிரடியாக ஆட்டத்தின் மூலம் பலமுறை நிரூபித்துள்ளார். மேலும் களத்தில் தோனி இருப்பதால் ஜடேஜா நிச்சயம் கேப்டன் பதவியை திறம்பட கையாள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால் தோனியின் தீவிர ரசிகர்களுக்கு அவர் ஒரு சாதாரன வீரராக களமிறங்குவது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Tamil sports ipl cricket csk captain change update in tamil