ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.
இந்தநிலையில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இது தமிழ் தலைவாஸ் அணியின் கடைசி லீக் போட்டியாகும். இதுவரை விளையாடிய 21 போட்டிகளில், 5 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி. அடுத்த சுற்றுக்கு தகுதிபெரும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
இப்போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி, 29-12 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்தது. அதைத்தொடர்ந்து நடந்த இராண்டாம் பாதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியின் கை ஓங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் 40-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. பாட்னா அணி கேப்டன் பிரதீப் நர்வால் 20 ரெய்டு புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய் தாகூர் 14 ரெய்டு புள்ளிகளும் எடுத்தனர்.
பின்னர் நடந்த மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்டன் - யூ மும்பா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 43-24 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது. புனே அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 15 ரெய்டு புள்ளிகள் எடுத்தார்.