/indian-express-tamil/media/media_files/2025/01/21/cBdyy2k5kZHwoD06gz3D.jpg)
"எங்களது தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நாங்கள் எங்களின் நன்றிகளை தெரிவிக்கொள்கிறோம். எங்களது வெற்றியிலும் தோல்வியிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்." என்று தமிழ் தலைவாஸின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) சுஷேன் வசிஷ்த் கூறினார்.
ச. மார்ட்டின் ஜெயராஜ்.
11-வது புரோ கபடி லீக் (பி.கே.எல் 2024) போட்டிகள் கடந்த அக்டோபர் 18 முதல் தொடங்கி நடைபெற்றது. டிசம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்த இந்தத் தொடரில், பாட்னா பைரேட்ஸ் அணியை 32 - 23 என்கிற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது. புரோ கபடியின் 5-வது சீசனான 2017 ஆம் ஆண்டில் களம் கண்ட தமிழ் தலைவாஸ், எல்லா சீசன்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுவும் கடைசி 5 இடங்களுக்குள் தான் தொடரை முடித்து வந்தது. ஆனால், 2022-ல் நடந்த 9-வது சீசனில் பழைய கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
அந்த சீசனில் டாப் வீரரான பவன் செஹ்ராவத் தொடக்க ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலே காயம் காரணமாக வெளியேறி, தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார். இதன்பிறகு முக்கிய வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனாலும், தமிழ் தலைவாஸ் வெற்றி மேல் வெற்றிகளை ருசித்து தொடரில் விறுவிறுவென முன்னேறியது. அரைஇறுதிக்கு முன்னேறிய அணி இறுதிப் போட்டிக்கும் சென்று மேலும் ஒரு வரலாறுச் சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களின் தோல்வி பெரும் சரிவு கொடுத்தது.
இந்த தோல்வியின் வடுக்கள் அடுத்த சீசனிலும் தொடர்ந்தது. 22 போட்டிகளில் களமாடிய தமிழ் தலைவாஸ் 9 வெற்றிகள், 13 தோல்விகளுடன் பிளே-ஆப்க்கு தகுதி பெறாமல் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த சூழலில், 11-வது சீசனில் அணியில் புதிய வீரர்கள், அவர்களுக்கு புத்துயிர் கொடுக்க புதிய பயிற்சியாளர்கள் என புதிய கட்டமைப்புடன் களமாடியது தமிழ் தலைவாஸ். அணிகள் பொதுவாக தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் என்கிற பதவிகள் அடிப்படையில் நியமனம் செய்யும். ஆனால், இந்த தொடர் வரலாற்றில் முதன்முறையாக, அணியை மேம்படுத்தவும், கூட்டாக வழிநடத்தவும் இரட்டை பயிற்சியாளர் முறையை தமிழ் தலைவாஸ் அணி தேர்வு செய்தது. அதன்படி, மூத்த பயிற்சியாளராக உதய குமாரையும், வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனையும் நியமித்தது.
ஆனாலும், இந்த அதிரடி மாற்றங்கள் தமிழ் தலைவாசுக்கு கை கொடுக்கவில்லை. கடந்த சீசனைப் போல் சிறப்பான ஆரம்ப வெற்றிகளைப் பெற்றாலும் அடுத்தடுத்து அவர்கள் பெற்ற தோல்விகள், அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியாமல் போவதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. 22 போட்டிகளில் ஆடிய தமிழ் தலைவாஸ் 8 வெற்றி, 13 தோல்வி மற்றும் ஒரு டிரா என 50 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தது. அணி பெரிய அளவில் சோபிக்காத நிலையில், இரண்டு பயிற்சியாளர்களையும் கழற்றி விட்டுதலைவாவிட்டு தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சஞ்சீவ் பாலியனை நியமனம் செய்துள்ளது.
தமிழ் தலைவாஸ் சி.இ.ஓ பேட்டி
இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் நிர்வாகத்தின் இந்த முடிவுகளுக்கான காரணங்கள் குறித்தும், அடுத்தடுத்து அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளது என்றும், 12-வது சீசனில் களமாட அணி நிர்வாகம் செய்யவிருக்கும் முக்கிய கட்டமைப்புகள் குறித்தும் நாம்மிடம் பகிர்ந்துள்ளார் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) சுஷேன் வசிஷ்த்.
நாம் போனில் அவரைத் தொடர்பு கொண்டோம். இதுபற்றி அவர் நம்மிடம் பேசுகையில், "தமிழ் தலைவாஸ் அணிக்கு இரண்டு பயிற்சியாளர்கள் என்பது, ஒருவர் வீரர்களின் திறன்களை மேம்படுத்துபவராகவும், மற்றொருவர் வியூகங்களை வகுத்து கொடுப்பவராகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். அதனால், வீரர்களின் திறமை மேம்பாட்டு பயிற்சியாளராக மூத்த பயிற்சியாளரான உதய குமாரை கொண்டு வந்தோம்.
இதேபோல், போட்டியின் போது அணி எவ்வாறு விளையாட வேண்டும் மற்றும் போட்டி உத்திகள், அதனை களத்தில் எப்படி செயல்படுத்துவது போன்றவற்றுக்கு என வியூக பயிற்சியாளராக தர்மராஜ் சேரலாதனையும் நியமித்தோம். அவர் மூத்த பயிற்சியாளரின் சுமைகளை குறைப்பார் என்றும், அணிக்கு நிறைய புத்துணர்ச்சியைக் கொண்டுவருவார் என்றும் நினைத்தோம். எனவே, 2 பயிற்சியாளர்களின் ரோல் என்ன என்பதில் தெளிவான வரையறைகளை வகுத்தோம். அவர்கள் நிறைய பயிற்சி அனுபவத்தைத் தருகிறார்கள். அதேசமயம், தர்மராஜ் நிறைய வியூக அனுபவத்தைக் கொண்டுவருகிறார். இதுவே எங்களது யோசனையாக இருந்தது.
இந்த சீசனைப் பொறுத்தவரையில், ஆம் நாங்கள் நன்றாகத் தொடங்கினோம். இது ஒரு வகையான ரோலர் கோஸ்டர் ரைடு என்று சொல்லலாம். காயம் தான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதனைப் பற்றி போட்டி நடந்து கொண்டிருக்கும் போது எங்களால் பேசிக் கொள்ள முடியவில்லை. சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் முன் எப்போதும் நாங்கள் பார்த்தது கூட இல்லை. அவர்கள் மீண்டு வருவதற்கான போதிய நேரம் கிடைக்கவில்லை.
கடந்த சீசனில் எல்லா பிரிவிலும் சின்னச் சின்ன தவறுகள் இருப்பதை கண்டறிந்தோம். அதனை, இந்த சீசனில் மாற்றிக் கொள்ள முயன்றோம். குறிப்பாக, சில வீரர்கள் குறைந்த அளவிலான புள்ளிகளை மட்டுமே எடுத்தனர். கடந்த 3 சீசன்களில் சிறப்பாக ஆடிய சச்சின் இதுபோன்ற தவறுகளை செய்தார். 3, 4 போட்டிக்குப் பிறகு அவர் ஃபார்ம் அவுட் ஆனார். அவர் சிறந்த வீரர். ஆனால், அவர் களத்தில் தனது திட்டத்தை செயல்படுத்தாமல் போனது எங்களது ரைடிங் பிரிவில் பின்னடைவை ஏற்படுத்தியது. இதேபோல், சகருக்கு காயம் ஏற்பட்டதும் கூடுதல் பின்னடைவாக இருந்தது.
அதனால், அடுத்த சீசனில் நிறைய மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக வீரர்கள், வியூகங்கள் என முக்கிய மாற்றம் நிகழும். நாங்கள் சில சிறப்பான தரமான இளம் வீரர்களை கண்டறிந்துள்ளோம். அவர்களை கடந்த கோடை மாதங்களில் கடுமையான பயிற்சி மேற்கொண்டார்கள். குறிப்பாக, எங்களது பட்டறையில் தீட்டப்பட்ட ஒரு இளம் வீரர் தேசிய அளவிலான ஜூனியர் கபடி போட்டிகளில் சிறந்து வருகிறார். அவர் நட்சத்திர வீரராக வலம் வருவார் என நினைக்கிறேன். அவரைப் போன்ற இளம் திறமைகளை ஊக்குவித்து வருகிறோம். கடந்த 10 மாதங்களாக அவர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.
எனவே, அந்த வீரர்களை நாங்கள் அடுத்த சீசன்களில் பயன்படுத்துவோம். சில வீரர்களை தக்க வைப்போம். சரியான வீரர்களை தேர்வு செய்வோம். தீயாக செயல்படும் வீரர்களுக்கு தான் இனி இடம் அளிக்கப்படும். எங்களது தத்துவம் என்பது, சரியான நேரத்தில் புள்ளிகளை அள்ள வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் களத்தில் இறங்க வேண்டும். சிறப்பாக ஆடி புள்ளிகளாக மாற்ற வேண்டும். அத்துடன் நிலைத்தன்மை மிகவும் முக்கியம்.
எங்களது தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நாங்கள் எங்களின் நன்றிகளை தெரிவிக்கொள்கிறோம். எங்களது வெற்றியிலும் தோல்வியிலும் அவர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களது முகெலும்பாக இருக்கிறார்கள். இந்த சீசனின் போது ஏராளமான ரசிகர்களிடம் நேரடியாக பேசினோம். நாங்கள் அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். அணியால் அவர்கள் நினைக்கும் அளவுக்கு முன்னேற முடியவில்லை. பேப்பரில் அணி வலுவாக இருக்கிறது. ஆனால், களத்தில் வீரர்கள் சற்று தடுமாறுகிர்கள். காயங்கள் பெரிய சவாலாகவும் இருக்கிறது. இவற்றை களைய முயன்று வருகிறோம்.
ரசிகர்கள், நீங்கள் ஏன் இந்த வீரரை ஆட வைக்கவில்லை. இந்த வீரரை மாற்றலாம் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவற்றை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில், சில முக்கிய வீரர்களுக்கு ஏற்படும் காயம் அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுக்கிறது. புள்ளிப் பட்டியலை நீங்கள் பார்த்தால், அதில் நாங்கள் மிகவும் நெருங்கி வந்துதான் தோல்வியைத் தழுவினோம். குறிப்பாக முதல் பாதி நேரத்தில் சிறப்பாக தொடங்குவோம். ஆனால், 2-வது பாதி நேரத்தில் அப்படியே பின்தங்கி விடுவோம். இது அழுத்தம் அதிகம் காரணமாக நடக்கிறது.
அழுத்தத்தை சரியாக கையாளும் அணி வெற்றி பெறுகிறது. எனவே, அதில் தான் நாங்கள் இன்னும் அதிக வேலை செய்ய வேண்டும். களத்தில் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், அழுத்தத்தை சமாளிக்க திணறினர். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவர் டேஷ் அடிக்க செல்கிறார் என்றால், அவருடன் இருக்கும் வீரர் சரியான நேரத்தில் சப்போர்ட் கொடுக்க வேண்டும்.
அதனால், அடுத்த சீசனில் நிறைய மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வீரர்கள் மற்றும் அவர்கள் ஆடும் பிரிவு என முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இப்போது காத்திருக்கிறோம். மார்ச் மாத தொடக்கத்தில் நாங்கள் அறிவித்த ஆரம்பித்துவிடுவோம்." என்று தமிழ் தலைவாஸின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) சுஷேன் வசிஷ்த் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.