UP Yoddhas vs Tamil Thalaivas coach Ashan Kumar Tamil News: புரோ கபடி லீக் தொடரின் நடப்பு சீசனில் ( சீசன் 9) பிளே-ஆஃப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி முன்னேறும் என பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்த அணி அதன் தொடக்க ஆட்டத்திலே அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட பவன் செஹ்ராவத்தை முழங்கால் காயத்தால் இழந்தது. இது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியாளர் உதய குமாரும் சொந்த காரணங்களால் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இப்படி அடுத்தடுத்த விலகல் நிகழ அணி தனது முதல் ஆறு போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இதனால், பல நிபுணர்களும், கபடி ஆர்வலர்களும் 'அணி பிளே-ஆஃப்களுக்கு செல்வது கஷ்டம் தான். இம்முறையும் 11, 12 இடங்களைத் தான் பிடிக்கும்' என்று கூறி கையை விரித்தனர்.
ஆனால், தனது புத்திசாலித்தனமான நகர்வுகளால் அணிக்கு உயிர் கொடுத்தார் புதிய பயிற்சியாளரான இந்திய தேசிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அஷன் குமார். 61 வயதான அவர் தன்னிடம் எதிரணிகளை வீழ்த்தும் யூத்திகளும், மந்திரமும் இன்னும் தன்னுள் புதைந்து தான் கிடக்கிறது. அவை மரணித்து போகவில்லை என்பது போல் வீரர்களை கொம்பு சீவினார். அந்த இளங்காளையர்களோ எதிரே கிடந்த தடையை, முட்டித் தூக்கினர். பிளே-ஆஃப்குள்ளும் முதல்முறையாக வந்து சேர்ந்தனர்.
முன்னதாக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார், அணியின் உற்சாகத்தை எவ்வாறு மீட்டெடுத்தார் மற்றும் தான் விரும்பிய முடிவுகளை எப்படி பெற முடிந்தது என்பது குறித்து பேசினார். "நான் இந்த சவாலை ஒரு உள்நோக்கத்துடன் ஏற்றுக்கொண்டேன். எங்கள் அணி சிறப்பாக செயல்படத் தொடங்க வேண்டும். ஒரு பயிற்சியாளராக, அனைவருக்கும் சமமான பொறுப்பைக் கொடுக்கும் அணியின் வலிமை காரணிகளில் நான் கவனம் செலுத்தினேன். அவர்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். நாம் நமது இலக்கை அடைய விரும்பினால், நமது தவறுகளை நாம் திரும்பிப் பார்க்கக் கூடாது, ஏனெனில், நமது கடந்த காலத் தவறுகளில் கவனம் செலுத்துவது நமக்கு அடுத்த வெற்றியைப் பெறாது." என்று கூறினார்.
பயிற்சியாளர் அஷன் குமாரின் வாக்கை வேத வாக்காக எடுத்துக் கொண்ட தமிழ் தலைவாஸ் நேற்று நடந்த உ.பி. யோத்தாசுக்கு எதிரான ஆட்டத்தில் தங்களின் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். குறிப்பாக, நரேந்திர ஹோஷியார் மற்றும் அஜிங்க்யா பவார் ரெயிடு பிரிவில் மிரட்டினர். ஆட்டத்தின் தொடக்க முதலே இருவரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனர். டிஃபென்ஸில் சாஹில் சிங் மற்றும் மோஹித் உடும்பு பிடி புடிக்க, ஹிமான்ஷு ரெண்டு பிரிவிலும் அசத்தினார்.
தொடக்கத்தில் போட்டி தமிழ் தலைவாஸ் பக்கம் இருந்த நிலையில், 2 ஆம் பாதியில் உ.பி. யோத்தாஸ் மெல்ல மெல்ல தலையை தூக்கினர். சுரேந்தர் கில் போனஸ் மேல் போனஸாக குத்த, பர்தீப் நர்வால் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த போது 3 முக்கிய புள்ளிகளை எடுத்து போட்டியை அவர்களின் அணி பக்கம் திருப்பினார். ஆனாலும், நம்பிக்கையை தளர விடாத தலைவாஸ் அணியினர் 2 அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து போட்டியை 36 - 36 என்ற புள்ளிக் கணக்கில் சமன் செய்தனர்.
இங்கு மீண்டும் அந்த பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆனால், இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன்னரே கணித்து வைத்திருந்தார் பயிற்சியாளர் அஷன் குமார். ஆட்டம் போட்ட போட்டியாக செல்லும் போதே அவர், எப்படியாவது ஆட்டத்தை டை-பிரேக்கருக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். டை-பிரேக்கர் முறையில் மூன்றாவது விதி, 'எந்த அணி ஆட்டத்தின் தொடக்கத்தில் ரெயிடு சென்றதோ, அந்த அணி தான் இப்போதும் முதலாவது ரெயிடு செய்ய வேண்டும்'. ஆட்டம் இப்படியொரு கட்டத்திற்கு நகரும் பட்சத்தில் எப்படி முடிவுக்கு எடுக்க வேண்டும் என்பதை ஆட்டம் தொடங்கும் முன்பு முடிவு செய்திருந்தார் அஷன் குமார்.
எப்போதும் டாஸ் வென்றால் எதிரணியை கபடி பாடி வர அழைப்பு விடுக்கும் தமிழ் தலைவாஸ், இம்முறை நாங்களே ஆட்டத்தை தொடங்குகிறோம் என்று முதல் ரெயிடுக்கு சென்றனர். ஒருவேளை இது டை-பிரேக்கரில் அணிக்கு உதவும் என்று யூகித்து தான் அஷன் குமார் இந்த முடிவை எடுத்திருக்கிறார். நேற்றை ஆட்டத்தில் இடைவேளையின் போது அவர் வீரர்களிடம் பேசிய போதெல்லாம் அவர் 'அடுத்து என்ன செய்ய வேண்டும், இழப்புகளை பற்றி எண்ணக்கூடாது. எப்படி இலக்கை அடைவது.' என்பதைத் தான் அழுத்த திருத்தமாக சொன்னார்.
அதை உள்வாங்கிக்கொண்ட வீரர்களும் டை-பிரேக்கரில் உ.பி. யோத்தாசுக்கு சுளுக்கெடுத்து விட்டனர். இரு அணிக்கும் தலா 5 ரெயிடுகள் வழங்கப்பட்ட நிலையில், ரெயிடிங் - டிஃபென்ஸ் என இரண்டிலும் மிரட்டிய தமிழ் தலைவாஸ் 6-4 என்கிற புள்ளிகணக்கில் உ.பி. யோத்தாஸை சாய்த்தனர். அரையிறுதியிலும் தங்கள் வரலாற்றில் முதல் முறையாக கால் பதித்தனர். நாளை இரவு நடக்கும் அரையிறுதியில் புனேரி பால்டன் அணியை எதிர்கொள்கின்றனர்.
உ.பி. யோத்தாசுக்கு எதிரான ஆட்டத்தில் களமாடிய தமிழ் தலைவாஸ் அணியின் அனைத்து வீரர்களுமே நட்சத்திரம் போல் ஜொலித்தார்கள் என்றால், அவர்களுக்கு ஒளியைப் பாய்ச்சிய சூரியனாக திகழ்கிறார் பயிற்சியாளர் அஷன் குமார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.