New Update
/indian-express-tamil/media/media_files/2025/10/22/tamil-thalaivas-coach-sanjeev-baliyan-and-captain-arjun-deshwal-allege-team-management-for-losses-tamil-news-2025-10-22-13-26-54.jpg)
"நான் இங்கு எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்." என்று தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் தெரிவித்துள்ளார்.
12 அணிகள் களமாடி வரும் 12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்ட் 29 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இத்தொடரில் களமாடிய சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அதன் அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி விட்டது. விளையாடிய 18 போட்டிகளில் 6-ல் வெற்றி, 12-ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது.
Advertisment
நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ் தலைவாஸ் அதன் கடைசி லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சுக்கு எதிராக விளையாடிய நிலையில், அந்தப் போட்டியில் (44-43) ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைக் கண்டது. இதனால், தற்போது புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் நீடிக்கிறது. கடந்த சீசன்கள் வரை, புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால், இந்த சீசனில், போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்க ஒரு புதிய 'பிளே-இன்' (Play-in) என்ற தகுதிச் சுற்று விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதி பெறும். 5, 6, 7 மற்றும் 8-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்த 'பிளே-இன்' சுற்றில், 5-வது இடத்தில் உள்ள அணி 8-வது இடத்தில் உள்ள அணியுடனும், 6-வது இடத்தில் உள்ள அணி 7-வது இடத்தில் உள்ள அணியுடனும் மோதும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள், பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
தற்போதைய நிலவரப்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் புனேரி பால்டனைத் தவிர, மற்ற 3 அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது. இதேபோல், அடுத்த 4 இடங்களில் இருக்கும் 4 அணிகளில் பெங்களூரு புல்ஸ் அணிக்கு மட்டும் 2 போட்டிகளும், மற்ற 2 அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் இருக்கிறது. மேலும், தமிழ் தலைவாஸ் அணியை முந்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள அடுத்த 4 அணிகளில் 3 அணிகளுக்கு தலா ஒரு போட்டியும், ஒரு அணிக்கு 2 போட்டியும் மீதம் இருக்கிறது. இந்த முடிவுகளைப் பொறுத்தே 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் முன்னேறுமா? என்பது தெரிய வரும்.
Advertisment
Advertisements
இந்நிலையில், 'பிளே-இன்' என்ற தகுதிச் சுற்றுக்குள் நுழைய மிக மிகக் குறைந்த வாய்ப்பை கொண்ட தமிழ் தலைவாஸின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர் அணி நிர்வாகம் மீது பரபர குற்றச்சாட்டை முவைத்துள்ளனர். பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் பேசுகையில், "கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் அல்லது பயிற்சியாளர்களாகிய எங்களால் அணியில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அதற்கென 'டீம் அனலிஸ்ட்' இருக்கிறார்கள். அவர்கள் தான் அணியைத் தேர்வு செய்கிறார்கள்.
நான் தலைமை தாங்கும் அணியில், யார் யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரிவிப்பது இல்லை. அன்ஃபிட்டான (உடற்தகுதி இல்லாத) வீரர்கள் விளையாடுகிறார்கள். ஃபிட்டான (உடற்தகுதி கொண்ட) வீரர்கள் வெளியே இருக்கிறார்கள். பயிற்சியாளர்கள் வெறும் பெயர் அளவில் தான் இருக்கிறோம். எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை." என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 'இந்த அணியில் என்ன மாதிரியான மாற்றத்தை செய்ய விரும்புகிறீர்கள்?' என்று கேப்டன் அர்ஜுன் தேஷ்வாலிடம் கேட்டகப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் இங்கு எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
என்னுடைய ஆட்டத்திலும் உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. ஆனால், எனக்கு இருக்கும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியாது. எனக்கு முதுகெலும்பாகவும் உறுதுணையாகவும் முழு அணியும், அணி நிர்வாகமும் இருந்தால் மட்டுமே நான் ஒரு அணியாக வெல்ல முடியும். தனி ஆளாக அர்ஜுன் ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ் தலைவாசஸ் அணி நிர்வாகத்திடம் நாம் விளக்கம் கேட்டோம். ஆனால், அவர்கள் இந்த செய்தி வெளியிடப்படும் நிமிடம் வரை நமக்கு எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us