ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் விளையாடி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இருமுறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆஃப்) முன்னேறும்.
சோன்பேட்டில் உள்ள மோதிலால் நேரு அரங்கத்தில் நேற்றிரவு நடந்த 75–வது லீக் ஆட்டத்தில், 'பி' பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் – உத்தரபிரதேச யோதா அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய உ.பி., அணி ஐந்தே நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல்–அவுட் செய்து அதிர்ச்சி அளித்தது. முதல் பாதியில் உத்தரபிரதேச யோதா அணி 18–12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பின் இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அபாரமாக விளையாடி சரிவில் இருந்து எழுச்சி பெற்று உத்தரபிரதேச அணியை ஆல்–அவுட் செய்தது. இருப்பினும் உத்தரபிரதேச அணியின் கேப்டன் நிதின் தோமர் அடிக்கடி போனஸ் புள்ளியை எடுத்ததால் தமிழ் தலைவாஸ் அணியால் முன்னிலை பெற முடியவில்லை. கடைசி 3 நிமிடம் இருக்கையில் தமிழ் தலைவாஸ் அணி, உத்தரபிரதேச அணியை 2–வது முறையாக ஆல்–அவுட் செய்து ஒரு புள்ளி முன்னிலை பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z297-300x217.jpg)
ஆனால் அதன் பிறகு நிதின் தோமர் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுக்க தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு மீண்டும் கேள்விக்குறியானது. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. இனி தமிழ் தலைவாஸ் வெல்வது கடினம் என்று ரசிகர்கள் நினைத்த வேளையில் ரெய்டு சென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜர் தாகூர், உத்தரபிரதேச வீரர்களின் நங்கூரம் போன்ற டேக்கிலையும் மீறி, எல்லைக் கோட்டைத் தொட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் 3 பேரை அவுட் செய்ததால், தமிழ் தலைவாஸ் அணி 30 வினாடிகளில் இருக்கும் போது, 2 புள்ளி முன்னிலை கண்டது.
அதன் பிறகு இறுதிக்கட்ட வினாடிகளில் தமிழ் தலைவாஸ் அணியினர் தற்காப்பு யுக்தியை கடைபிடிக்கும் விதமாக எதிரணி வீரரை முன்னேற விடாமல் ஒரு புள்ளியை மட்டும் விட்டுக்கொடுத்து தங்கள் முன்னிலையை தக்கவைத்து கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z296-300x217.jpg)
த்ரிலிங்கான இந்த ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 34–33 என்ற புள்ளிக் கணக்கில் உத்தரபிரதேச யோதா அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 8 புள்ளிகள் பெற்றனர். உத்தரபிரதேச அணி கேப்டன் நிதின் தோமர் 14 புள்ளிகள் குவித்தார். 10–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். 14–வது ஆட்டத்தில் ஆடிய உத்தரபிரதேச அணி சந்தித்த 6–வது தோல்வி இதுவாகும்.
இருப்பினும், புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் 21 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. உ.பி.யோதா 37 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.