புரோ கபடி லீக் சுற்றில் யூ மும்பா அணியை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. இதனால், தமிழ் தலைவாஸ் அணியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியுள்ளது. 5-வது புரோ கபடி லீக் தொடர் 12 நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணியுடன் தாலா ஒரு முறையும் விளையாட வேண்டும். இதேபோல, வைல்டு கார்டு போட்டியிலும் விளையாட வேண்டும். இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு(பிளே-ஆப்) முன்னேறும் தகுதியைப் பெறும். சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை லீக் ஆட்டங்கள் தொடங்கியது.
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, யூ மும்பா அணியை எதிர்கொண்டது. 15 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த தமிழ் தலைவாஸ் அணி, இந்த போட்டியில் வெற்றிபெற்ற ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கியது.
முதல் பாதியில்18-17 என்ற புள்ளிகள் கணக்கில் யூ மும்பா அணி முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடின. ஆனாலும், போட்டியின் முடிவில் 33-30 என்ற புள்ளிக்கணக்கில் யூ மும்பா அணி வெற்றியை ருசித்தது. எனவே, தமிழ் தலைவாஸ் அணி10-வது தோல்வியை சந்திக்க நேரிட்டது. தமிழ் தலைவாஸ் வெற்றிபெறும் என ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுவரை, 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றியும், 2 டையும் கண்டுள்ளது. இனதால், 34 புள்ளிகளுடன் தனது பிரிவில் ( பிரிவு) 5-வது இடத்திலேயே உள்ளது. தமிழ் தலைவாஸின் இந்த தோல்வியினால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தியது.