'முழுமையான அதிகாரமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது'... தலைமை பயிற்சியாளரின் குற்றச்சாட்டுக்கு தமிழ் தலைவாஸ் நிர்வாகம் விளக்கம்

புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அது தொடர்பாக அணி நிர்வாகம் விளக்கம் அளித்துளளது

புரோ கபடி லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அது தொடர்பாக அணி நிர்வாகம் விளக்கம் அளித்துளளது

author-image
Martin Jeyaraj
New Update
Tamil Thalaivas Management Official Statement on Coach Sanjeev Baliyan and Captain Arjun Deshwal allegation Tamil News

"தொடக்கத்திலிருந்தே, தலைமை பயிற்சியாளருக்கு விளையாட்டின் அனைத்து விஷயங்களிலும் முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டது." என்று தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது. இந்தத் தொடருக்கான இறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி-புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில்  31-28 என்கிற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லி அணி புனேரி பால்டனை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. 

Advertisment

குற்றச்சாட்டு 

இந்நிலையில், இத்தொடரில் களமாடிய சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் விளையாடிய 18 போட்டிகளில் 6-ல் வெற்றி, 12-ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது. அந்த அணி மீண்டும் ஒருமுறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததால் தமிழ் தலைவாஸ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழலில், தமிழ் தலைவாஸின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் ஆகியோர் அணி நிர்வாகம் மீது பரபர குற்றச்சாட்டை முவைத்தனர். 

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன், "கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் அல்லது பயிற்சியாளர்களாகிய எங்களால் அணியில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அதற்கென 'டீம் அனலிஸ்ட்' இருக்கிறார்கள். அவர்கள் தான் அணியைத் தேர்வு செய்கிறார்கள். நான் தலைமை தாங்கும் அணியில், யார் யாரெல்லாம் விளையாடுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரிவிப்பது இல்லை. அன்ஃபிட்டான (உடற்தகுதி இல்லாத) வீரர்கள் விளையாடுகிறார்கள். ஃபிட்டான (உடற்தகுதி கொண்ட) வீரர்கள் வெளியே இருக்கிறார்கள். பயிற்சியாளர்கள் வெறும் பெயர் அளவில் தான் இருக்கிறோம். எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை." என்று வேதனை தெரிவித்தார். 

இதேபோல், அணியின் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் பேசுகையில், "இந்த அணியில் நான் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று நீங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். என்னுடைய ஆட்டத்திலும் உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது. ஆனால், எனக்கு இருக்கும் பிரச்சனைகள் உங்களுக்கு தெரியாது. எனக்கு முதுகெலும்பாகவும் உறுதுணையாகவும் முழு அணியும், அணி நிர்வாகமும் இருந்தால் மட்டுமே நான் ஒரு அணியாக வெல்ல முடியும். தனி ஆளாக அர்ஜுன் ஒன்றும் செய்ய முடியாது." என்று கூறியிருந்தார். 

Advertisment
Advertisements

விளக்கம் 

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ் தலைவாசஸ் அணி நிர்வாகம் போட்டிகள் நிறைவடைந்து ஒருவாரம் கழித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தலைவாசஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளர் வெளியிட்ட, "கிளப் மேலாண்மையின் தலையீடு காரணமாக விளையாட்டு முடிவுகள் பாதிக்கப்பட்டன என்ற கருத்துக்களை முன்னிட்டு, தமிழ் தலைவாஸ் கீழ்க்கண்ட உண்மைகளை தெளிவுபடுத்துகிறது.

ஆரம்பத்திலிருந்தே, அணித் தேர்வு, பயிற்சி, தந்திரம் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளிலும் தலைமைப் பயிற்சியாளருக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஒப்பந்தப்படுவதற்கு முன்பே, அணியின் அமைப்பு, புதிய இளம் வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள், மேலும் இளம் வீரர்களை மேம்படுத்தும் கிளப்பின் நீண்டகால தத்துவம் ஆகியவை முழுமையாக விளக்கப்பட்டன. ஏலம் மற்றும் சீசன் முழுவதிலும் பயிற்சியாளர் கேட்ட அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டன. எந்த நிலையிலும் மேலாண்மை அல்லது பகுப்பாய்வாளர்கள் விளையாட்டு முடிவுகளில் தலையீடு செய்ததாக கூறுவது முற்றிலும் உண்மையற்றது.

தமிழ் தலைவாஸ், தலைமைப் பயிற்சியாளர் என்பது அணியின் செயல்திறன், ஒற்றுமை மற்றும் மனப்பாங்கை உயர்த்தும் மிகப் பெரிய பொறுப்புடைய பதவி என்று நம்புகிறது. இருப்பினும், சில வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும், அணியின் மொத்த முடிவுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, பயிற்சியில் மற்றும் போட்டிகளின் போது பயிற்சியாளர் குழுவிலிருந்து தேவையான வழிகாட்டல் மற்றும் கவனம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் பல வீரர்களிடமிருந்து கிடைக்க பெற்றன. இவை வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப, பயிற்சியாளரிடம் தெரிவிக்கப்பட்டு, அமைதியாக சரி செய்யப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில், இந்த சீசனில் போட்டிக்குப் பிந்தைய 16 பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தவறவிட்ட பயிற்சியாளர், இறுதிப் போட்டியில் ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவித்தது ஏமாற்றமளிக்கிறது. பிரதிபலிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தேவைப்படும் ஒரு சீசனுக்கு இது வருந்தத்தக்க முடிவு. இந்த சீசன் எங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை நினைத்து நாங்கள்  வருந்துகிறோம். ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உண்மையுடன் மன்னிப்பு கோருகிறோம். அடுத்த சீசனுக்கான வலிமையான திட்டமிடல் மற்றும் மதிப்பீடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. நாங்கள் மீண்டும் வலுவாக மீண்டு வந்து எங்கள் ரசிகர்களுக்கு பெருமையையும் நிகழ்ச்சிகளையும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Thalaivas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: