புரோ கபடி லீக் தொடரில் அகமதாபாத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு நடந்த முதல் போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின.
சுவாரஸ்யமாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளுமே சம ரெய்டு புள்ளிகளையும்(12), சம டேக்கில் புள்ளிகளையும்(10) பெற்றன. ஆல் அவுட் புள்ளிகளில் தமிழ் தலைவாஸ் 2 புள்ளிகளை வென்றது. ஹரியானா அணி அதில் பூஜ்யம் தான்.
ஆனால், ஹரியானா 3 உதிரிப் புள்ளிகளை பெற்றது. தமிழ் தலைவாஸ் 1 உதிரிப் புள்ளி மட்டுமே பெற்றதால் ஆட்டம் 25-25 என சமனில் முடிந்தது.
தமிழகத்தின் கே.பிரபஞ்சன் 7 புள்ளிகளையும், அமித் ஹூடா 6 புள்ளிகளையும் அணிக்கு பெற்றுத் தந்தனர்.
'பி' பிரிவில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, ஒரு வெற்றியும், இரண்டு தோல்வியும் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டி டிராவானதால், மொத்தம் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது. 'ஏ' பிரிவில் உள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதே அரங்கில் இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும், தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில், குஜராத் அணி 29 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. தெலுகு அணியின் தொடர் தோல்வி நேற்றும் தொடர்ந்தது. 'பி' பிரிவில் உள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி, இதுவரை 9 போட்டிகளில் ஆடி, 7 போட்டிகளில் தோற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் அந்த அணி வென்றது. ஒரு போட்டி டிராவானது. இதனால், புள்ளிப்பட்டியலில் தெலுகு டைட்டன்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
'ஏ' பிரிவில் உள்ள குஜராத் ஃபார்ச்யூன்ஸ் அணி, இதுவரை எட்டு போட்டிகளில் ஆடி, 6 போட்டிகளில் வென்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வி. ஒரு போட்டி டிரா. இதனால், மொத்தம் 33 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் உள்ளது.