Pro Kabaddi League 2022: Tamil Thalaivas secure playoff berth Tamil News: புரோ கபடி லீக் (2022) தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கான தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலே காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்தே வெளியேறிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும், இளம் வீரர்களுக்கு வியூகம் மற்றும் குறிப்புகளை வழங்கி வருகிறார்.
பவன் ஷெராவத் தொடரில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதில் அணியின் ஏஸ் டிஃபென்டரான சாகர் ரதி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் ஜெ உதயகுமார் சொந்த காரணங்களால் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அடுத்த பெரும் இடியாக விழுந்தது.
இருப்பினும், தமிழ் தலைவாஸ் மீண்டும் அனைவரையும் கவனம் ஈர்க்கும் வகையில், பயிற்சியாளர் ஜெ உதயகுமாருக்கு பதிலாக வந்த புதிய பயிற்சியாளர் அஷன் குமார் அணியின் வீரர்களை தனது பாணியில் பட்டை தீட்டினார். அவர் அணியின் பொறுப்பை ஏற்றது முதல் “தமிழ் தலைவாஸ் படுதோல்வி” என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போனது. தமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி, அபார வெற்றி, போட்டி ட்ரா, போட்டியில் தோல்வி என்றே செய்திகளில் தலையங்கம் இடப்பட்டன. அந்த அளவிற்கு தங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறனை வெளியுலகிற்கு காட்டி மிரட்டி வந்தனர் தமிழ் தலைவாஸ் வீரர்கள்.

ஆனால், எல்லாம் சிறப்பாக சென்ற நேரத்தில் தான் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அது தான் புதிய கேப்டன் சாகர் ரதியின் காயம். பவன் ஷெராவத் போல் கேப்டன் சாகர் ரதிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, முழங்காலில் காயம் ஏற்பட்டு, களத்தில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இப்படியாக அடுத்தடுத்த அதிர்ச்சி செய்திகள் அணியினரையும், உற்று கவனித்து, ரசித்து வந்த ரசிகர்களையும் கலங்கடித்து கொண்டிருந்தது. மேலும், அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்ற கவலையும் தொற்றிக்கொண்டது.
இந்த நிலையில் தான், நேற்று (புதன்கிழமை – டிசம்பர் 7 ஆம் தேதி) இரவு 8:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் 66 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் இருந்த பலம் பொருந்திய உ.பி.யோதாஸை தும்சம் செய்தது தமிழ் தலைவாஸ்.

மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய அந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் 43 – 28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அபார வெற்றியை ருசித்தது. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் ஒவ்வொரு ரசிகரும் காத்திருந்த அந்த தருணம் வந்தது. அதுதான், புரோ கபடி லீக் தொடரில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
2017 ஆம் ஆண்டில் தமிழத்தின் சென்னையை மையமாகக் கொண்டு உதயமான தமிழ் தலைவாஸ் ஒருமுறை பிளே ஆஃப்-க்குள் நுழையாமல் இருந்தது. அதோடு, தொடர் முடிவில் சில சீசன்களில் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து விடைபெற்றது. ஆனால், இம்முறை அது நடக்காது என்பதை, தொடரின் தொடக்கம் முதலே ஆணி அடித்தாற்போல் விளையாடி வெளிக்காட்டி வருகிறது.
பவன் ஷெராவத் காயம், பயிற்சியாளர் விலகல், புதிய கேப்டன் சாகர் ரதி காயம் என தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்தடுத்த தடைகள் வந்தாலும், தற்போது அதை உடைத்தெறிந்துள்ளது. இன்னும் அடித்து நொறுக்க உள்ளது. அணியின் வளர்ச்சியை புதிய பயிற்சியாளராக இணைந்துள்ள அஷன் குமாருக்கு முன், பின் என இரண்டு பகுதிகளாக பிரிக்கும் அளவிற்கு அணியின் வீரர்களும் படு சூட்டாக பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். அவர்களின் இந்த அதிரடி தொடர்ந்தால், கோப்பையை அவர்கள் முத்தமிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Idhu daan arrambam!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas | #VivoProKabaddi | #FantasticPanga pic.twitter.com/jWDK1IzIJP
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 7, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil