புரோ கபடி லீக் தொடரில், மும்பையில் நேற்று இரவு எட்டு மணிக்கு நடந்த ஆட்டத்தில், யு மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், ஜெய்ப்பூர் அணி 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை ஜெய்ப்பூர் 19 புள்ளிகளும், மும்பை 17 புள்ளிகளும் பெற்றன. அதேசமயம், டேக்கில் புள்ளிகளில் மும்பை அணி 13 புள்ளிகளையும், ஜெய்ப்பூர் 11 புள்ளிகளையும் பெற்றன. ஆல் அவுட் முறையில் ஜெய்ப்பூர் அணி 6 புள்ளிகளைக் குவித்தது. இதனால், கடைசிக் கட்டத்தில் ஜெய்ப்பூர் வெற்றிப் பெற்றது.
ஜெய்ப்பூர் அணி வீரர் ஜஸ்வீர் சிங் 10 ரெய்டு புள்ளிகளை அணிக்கு பெற்றுத் தந்தார். இந்த வெற்றியின் மூலம், ஜெய்ப்பூர் 22 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. யு மும்பா அணி 17 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
இதே அரங்கில் இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில், பி பிரிவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின. இதில், இரு அணிகளும் 36 - 36 என சம புள்ளிகள் எடுத்ததால், ஆட்டம் டிராவானது.
ரெய்டு புள்ளிகளைப் பொறுத்தவரை பெங்கால் அணி டாமினேட் செய்தது என்றே கூறலாம். மொத்தம் 22 ரெய்டு புள்ளிகளைப் பெற்றது பெங்கால். பாட்னா அணி 18 ரெய்டு புள்ளிகளே பெற்றது.
டேக்கில் புள்ளிகளில், பாட்னா சற்று அதிகமாக 13 புள்ளிகளும், பெங்கால் 11 புள்ளிகளும் பெற்றன. ஆல் அவுட் முறையில் பாட்னா 4 புள்ளிகளும், பெங்கால் 2 புள்ளிகளும் பெற்றன.
இறுதியில் 36 - 36 என ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால், 22 புள்ளிகளுடன் பட்டியலில் பாட்னா இரண்டாம் இடத்திலும், பெங்கால் 22 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மும்பையில் இன்று (ஆகஸ்ட் 26) இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இரவு எட்டு மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் வலிமையான பாட்னா பைரேட்ஸ் அணியுடன், தமிழ் தலைவாஸ் மோதுகிறது. இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் யு மும்பா அணியும், புனேரி பால்டன் அணியும் மோதுகின்றன.
'பி' பிரிவில் உள்ள தமிழ் தலைவாஸ் 14 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி, ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. 2 போட்டிகள் டிராவானது.