விஜய் ஷங்கர்:
திருநெல்வேலியைச் சேர்ந்த 26 வயதான விஜய் ஷங்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அப்போட்டியில் அவருக்கு பவுலிங் செய்ய மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின், நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பைக்கு எதிராக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில், 7-வது வீரராக களமிறக்கப்பட்டு 1 ரன் மட்டும் எடுத்து ஏமாற்றமடைந்தார்.
அடுத்து கிட்டத்தட்ட ஒருமாதம் வரை அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பின், மீண்டும் அதே மும்பை அணிக்கு எதிராக நடந்த மற்றொரு லீக் போட்டியில், அவருக்கு இடம் கிடைத்தது. இம்முறை, தேர்வாளர்களுக்கு சிறிது நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடினார் விஜய். 139 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணியில், ஐந்தாவது வீரராக களமிறக்கப்பட்டார். 9 ரன்னில் யுவராஜ் அவுட்டான பின் களமிறங்கிய விஜய், 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்த 'நாட் அவுட்' தான், அவருக்கு அடுத்த போட்டிக்கான வாய்ப்பை அளித்தது.
மே 13-ஆம் தேதி நடந்த போட்டியில், முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி, ஹைதராபாத்திற்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இம்முறை யுவராஜ் சிங் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் நான்காவது வீரராக விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டார். இந்த வாய்ப்பினை கெட்டியாக பிடித்துக் கொண்ட விஜய், 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது, கேப்டன் வார்னருடன் இணைந்து மிக மெச்சூர்டான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போட்டியில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். வார்னரும் 69 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அடுத்து மே 17-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான பிளேஆஃப் (எலிமினேட்டர் 1) போட்டியில், முதலில் பேட் செய்த ஹைதராபாத், வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போட்டியில் 17 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார் விஜய். இருப்பினும், ஒட்டுமொத்த ஐபிஎல் அணி நிர்வாகங்களின் பார்வையை தன் மீது விழச்செய்துள்ள விஜய் ஷங்கர், அடுத்த வருடம் ஒரு ஸ்டாராக உருவாவதில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை.
வாஷிங்டன் சுந்தர்:
நடப்பு ஐபிஎல்-ல் மிகப்பெரிய கவனம் ஈர்த்துள்ள மற்றொரு தமிழக வீரராக உருவெடுத்துள்ளவர், 17 வயதான நம்ம வாஷிங்டன் சுந்தர். சென்னையைச் சேர்ந்த இந்த வலது கை ஆஃப் ஸ்பின்னர், அஷ்வின் இல்லாத குறையை, புனே அணிக்காக சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறார். அதுவும் தோனி முன்னிலையில்..... இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள சுந்தர், 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அதுவும், பிளேஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில், புனே அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சொந்த மண்ணில், மும்பைக்கு இதுவொரு பெரிய டார்கெட்டே இல்லை எனலாம். ஆனால், அப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, ரோஹித் ஷர்மா, பொல்லார்ட், அம்பதி ராயுடு ஆகிய மூன்று மிக முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்து இறுதிப் போட்டிக்கு புனே செல்ல காரணமானார். அதற்கு பரிசாக 'ஆட்ட நாயகன்' விருதையும் வென்றார்.
புனே அணிக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்திய அணிக்கும் கூட, ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு ஒரு சிறந்த மாற்றாக வாஷிங்சுடன் சுந்தர் இருப்பார் என நம்பலாம்.
தங்கராசு நடராஜன்:
இந்த ஐபில்எல் தொடரில் இவரது அடிப்படை விலை ரூ.10 லட்சம். ஆனால், சேவாக் இவரை பஞ்சாப் அணிக்காக எடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 3 கோடி. இதன் காரணமாக, சேலத்தைச் சேர்ந்த இந்த 'யார்கர்' ஸ்பெஷலிஸ்ட் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப முதல் போட்டியிலேயே ஆடும் லெவனில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவரது துல்லியமான பவுலிங் கொஞ்சம் மிஸ்ஸாக, நடப்புத் தொடரில் பெரிதாகவே சறுக்கினார் நடராஜன். மொத்தம் 6 போட்டியில் விளையாடி, 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இருப்பினும், அடுத்த ஆண்டு 'சென்னை சூப்பர் கிங்ஸ்' மீண்டும் களமிறங்குவதால், நிச்சயம் இவருக்கும் சென்னை அணியில் இடம் கிடைக்கலாம். அப்போது, இந்த சீசனுக்கும் சேர்த்து, 'வச்சு செய்யணும்-னு' நடராஜனை வாழ்த்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.