தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: இறுதி ஓவரில் தோற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இந்த சீசனில், அம்பயர்களின் நிலைத்தன்மை மிகவும் மோசமாக உள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில், திருநெல்வேலியில் இன்று நடந்த போட்டியில், காரைக்குடி காளை அணியும் திண்டுக்கல் டிராகனஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய காரைக்குடி காளை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் விஷால் வைத்யா 37 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் பத்ரிநாத் 28 பந்துகளில் 26 ரன்களே எடுத்தார். திண்டுக்கல் அணி சார்பில் வில்கின்ஸ் விஜய் மற்றும் சஞ்சய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஐபிஎல்-ல் பஞ்சாப் அணிக்காக ஆடிய டி.நடராஜன், நான்கு ஓவர்களில் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

151 ரன்கள் இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில், தொடக்க வீரர்கள் ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த அணி தனது முதல் விக்கெட்டை இழந்த போது, 3.5 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் அதற்கடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் அஷ்வின் வெங்கட்ராமன் 3 ரன்னிலும், வில்கின்ஸ் விக்டர் 8 ரன்னிலும், அதிரடி வீரர் சன்னி சிங் 3 ரன்னிலும் வந்த வேகத்தில் அவுட்டானார்கள்.

இருப்பினும், இறுதிக் கட்டத்தில் விவேக் சற்று அதிரடி காட்ட, திண்டுக்கல் அணிக்கு புதிய நம்பிக்கை துளிர்ந்தது. ஆனால், 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த விவேக், கணபதியின் ஷார்ட் பிட்ச் பந்தில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

கடைசி ஓவரில் அந்த அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட, இடது கை ஸ்பின்னர் மோகன் அந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, அடுத்த பந்தை சிக்ஸருக்கு தூக்கினார் ஆதித்யா அருண். மூன்றாவது பந்திலும், சிக்ஸ் அடிக்க முயன்ற போது, எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த விஷால் வைத்யா, ஐபிஎல் ஸ்டைலில் அதை சிறப்பாக கேட்ச் ஆக்கினார்.
இதையடுத்து, கடைசி இரு பந்திலும் விக்கெட் விழ, திண்டுக்கல் அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி அணி வெற்றிப் பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய மோகன், 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம், புள்ளிப்பட்டியலில், காரைக்குடி காளை அணி, 6 போட்டிகளில் ஆடி, 3 வெற்றி, 3 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 6 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வி பெற்று, 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு ஆட்டம் டை ஆனது.

இந்தப் போட்டியை நேரில் பார்த்த மதுரை சூப்பர் ஜெயண்ட் அணியின் உரிமையாளர் தயா அழகிரி தனது ட்விட்டரில் அம்பயர்களை கடுமையாக சாடியுள்ளார். அவரது ட்வீட்டில் “தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இந்த சீசனில், அம்பயர்களின் நிலைத்தன்மை மிகவும் மோசமாக உள்ளது. நேற்று இரவு இரண்டு தவறான தீர்ப்புகளும், இன்று இரவு இதுவரை ஒரு தவறான தீர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

நடப்பு சீசனில் தயா அழகிரியின் மதுரை அணி, 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close