Advertisment

தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வினும் இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளதால், நடப்பு டிஎன்பிஎல் தொடரில் விளையாடவில்லை.

author-image
Anbarasan Gnanamani
Jul 22, 2017 09:54 IST
தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று மாலை 6 மணிக்கு களமிறங்கும் நம்ம தோனி!

இந்தாண்டிற்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று (ஜுலை 22) தொடங்கி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி பாட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி திருவள்ளூர் வீரன்ஸ், காரைக்குடி காளை, ரூபி திருச்சி வாரியர்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

Advertisment

போன வருடம் முதன் முதலாக தொடரப்பட்ட இந்தத் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கடந்து ஆண்டு அசத்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு ஐபிஎல்-ல் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு விளையாட தேர்வானார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் விளையாடினார். இதுபோன்று தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்த லெவலுக்கு செல்கின்றனர். இதனால், இந்த தொடரின் மீதான நம்பிக்கை வீரர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் 2–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய 3 இடங்களில் இத்தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே–ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய தினேஷ் கார்த்திக்கை (தூத்துக்குடி) 10 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அணியின் பிசியோதெரபிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அதேபோல், தூத்துக்குடி அணியின் மற்றொரு முக்கிய பேட்ஸ்மேனான அபினவ் முகுந்த், இந்திய அணியில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனான ரவிச்சந்திரன் அஷ்வினும் இலங்கை தொடரில் பங்கேற்றுள்ளதால், அவரும் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால், தூத்துக்குடி கேப்டனாக ஆனந்த் சுப்ரமணியமும், திண்டுக்கல் அணியின் கேப்டனாக அஸ்வின் வெங்கட்ராமனும் செயல்படுகிறார்கள்.

சிக்சர் விளாசும் போட்டி:

டி.என்.பி.எல். தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும். அதில் யார் அதிக சிக்சர் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம எண்ணிக்கையில் சிக்சர் அடித்திருந்தால் யார் அதிக தூரத்துக்கு சிக்சர் அடித்திருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரரும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரருமான மேத்யூ ஹெய்டன், மொகித் ‌ஷர்மா, பத்ரிநாத், பவன் நெகி, அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்த சிக்சர் போட்டியில் பங்கேற்கின்றனர். மாலை ஆறு மணிக்கு தொடங்கும் இந்த சிக்சர் போட்டி 7 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.3.4 கோடியாகும். இதில் கோப்பையைக் கைப்பற்றும் அணிக்கு ரூ.1 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 3–வது, 4–வது இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், 5 முதல் 8–வது இடங்களை பெறும் அணிக்கு தலா ரூ.25 லட்சமும் அளிக்கப்படும்.

இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்புச் செய்கிறது.

#Dinesh Karthik #Ravichandran Ashwin #Tnpl #Tuti Patriots
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment