வங்கதேச கிரிக்கெட் அணி… வெறித்தனமாக கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை கொண்ட அணி… இன்று, உலகில் கிரிக்கெட் விளையாடும் அணிகளை, உலகின் எந்த இடத்திலும் எதிர்கொண்டு சவால் அளிக்கும் அணியாக மாறியிருப்பதே இதற்கு முக்கிய காரணம். தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மஷ்ரபே மோர்டசா போன்ற நட்சத்திர வீரர்கள் கடந்த 10 – 13 வருடங்களாக, வங்கதேச அணியில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். டி வில்லியர்சை நினைவுப்படுத்தும் சபீர் ரஹ்மான், பந்துவீச்சில் அசாத்திய தனித் திறமை கொண்டிருக்கும் முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற புதிய வீரர்களின் வரவுகளால், உலக அணிகள் வங்கதேசத்தை கண்டு பயப்பட ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்றால் அது மிகையாகாது.
அதுவும், உள்நாட்டில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை ஒருநாள் தொடர்களில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி, சொந்த மண்ணில் நாங்கள் தான் ராஜா என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
இவையெல்லாம் சாதாரண சாதனையாக கூட நாம் நினைத்துக் கொண்டாலும், 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறியது, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது என வெளிநாட்டு மண்ணில் குறிப்பிடும்படியான சாதனையை படைத்ததை நம்மால் புறந்தள்ளிவிடவே முடியாது.
தற்போது வங்கதேசத்தில் நடந்து வரும் இலங்கை, ஜிம்பாப்வேவுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில், இதுவரை ஒரு போட்டியில் கூட தோற்காமல் வங்கதேசம் விளையாடி வருகிறது. இந்த நிலையில், இன்று நடந்துவரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில், தமிம் இக்பால் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் அவர் 66 ரன்கள் எடுத்திருந்த போது, ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால், ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று தமிம் இக்பாலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
.@TamimOfficial28 is also 66 runs away from becoming first Bangladeshi to reach 6,000 ODI runs.
— Mohammad Isam (@Isam84) 19 January 2018
ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்திருக்கும் வங்கதேச வீரர் இவர் தான்.
வங்கதேச அணியில் முதன் முறையாக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியல் இதோ,
1000 – காலித் மசூத் (2004)
2000 – ஹபிபுல் பஷர் (2007)
3000 – மொஹம்மத் அஷ்ரபுல் (2009)
4000 – ஷகிப் அல் ஹசன் (2015)
5000 – தமிம் இக்பால் (2016)
6000 – தமிம் இக்பால் (2018).