இதுவரை நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி நாளை (வியாழன்) பெங்களூருவில் நடைபெறுகிறது. இதற்கான தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஒருவார காலமாக மழை பெய்து வருவதால், நாளைய போட்டியின் போதும் மழை அச்சுறுத்தல் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்றும், இன்றும் அங்கு மழை பெய்யவில்லை. இதனால், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தோனி சற்று ஆக்ரோஷமாக அடிப்பதில் அதிக பயிற்சி எடுத்தார். அதேபோல், மனீஷ் பாண்டே, கேப்டன் கோலி ஆகியோர் கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட், புல் ஷாட் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். பும்ரா, யார்க்கர்களை வீசி பயிற்சி மேற்கொண்டார். ஆஃப் ஸ்டெம்ப், லெக் ஸ்டெம்ப், மிடில் ஸ்டெம்ப் என மாறி மாறி யார்க்கர்களை வீசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வீசிய துல்லியமான யார்க்கர் பந்துகள் மூன்று ஸ்டெம்புகளையும் மாறி மாறி தாக்கிய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ஸ்லோ மோஷனில் பார்ப்பதற்கே அட்டகாசமாக உள்ளது அந்த வீடியோ.