ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி துபாயில் தொடங்குகிறது. இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிப் பெறும் அணி இடம் பெறுகிறது. 'பி' பிரிவில் இலங்கை ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில், ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான அணி வீரர்கள் விவரம் பின் வருமாறு,
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், புவனேஷ் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துள் தாகுர், கலீல் அஹ்மது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் கலீல் அஹ்மதுவிற்கு முதன்முறையாக அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 20 வயதான கலீல் அஹ்மது (Southpaw) என்று அழைக்கப்படும் இடது கை பவுலர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2016ம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர். 2016-17ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி தொடரில், ராஜஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அஹ்மது இடம் பெற்றிருந்தார்.
இது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், "2019 உலகக் கோப்பைத் தொடருக்கு இடையே 24 போட்டிகள் நமக்கு மீதமுள்ளன. அதில், பந்துவீச்ச்சு யூனிட்டில் 2-3 ஸ்லாட்களை சோதனை செய்ய நாம் முடிவு செய்திருக்கிறோம். அதில் ஒரு ஸ்லாட், இடது கை வேகப்பந்து வீச்சாளர் கொண்டது. அதற்காக கலீல் அஹ்மதுவை சேர்த்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.