இந்திய அணியின் கோச் அறிவிப்பு ஒத்திவைப்பு: சவுரவ் கங்குலி

விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நேற்றே தகவல்கள் வெளியாகின.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பிறகு விலகினார். கேப்டன் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து, புதிய பயிற்சியாளரை நியமிப்பதில் பிசிசிஐ-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழு குற்றம் சாட்டியது.

இதையடுத்து, புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வீரேந்திர ஷேவாக், டாம் மூடி, லால்சந்த், ராஜ்பட், டோட்டா கணேஷ், ரிச்சர்டு பைபஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் விண்ணப்பித்தனர். ஷேவாக், டாம் மூடி இடையே தான் கடும் போட்டி நிலவியது.

இதற்கிடையில் கூடுதலாக மேலும் பலர் விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஜூலை 9-ம் தேதி (நேற்று) வரை கால அவகாசம் அளித்தது. இதனைத் தொடர்ந்து ரவிசாஸ்திரி, ஃபில் சிம்மன்ஸ் உள்ளிட்டோர் விண்ணப்பித்தனர்.

இறுதியாக, ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக், டாம் மூடி, சிம்மன்ஸ், பைபஸ், ராஜ்பட் ஆகிய ஆறு பேரிடம் மட்டும், கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்று நேர்காணல் நடத்தியது.

விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், “இன்று இந்திய அணியின் கோச் அறிவிக்கப்பட மாட்டாது. இந்திய அணிக்கு அவசர அவசரமாக இப்போதே கோச்சை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. விராட் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திரும்பி வந்த பிறகு அவரிடமும் புதிய கோச் குறித்து ஆலோசனை செய்யப்படும். பின்னர் யார் கோச் என்பது அறிவிக்கப்படும்” என்றார். மேலும், “லால்சந்த் ராஜ்பட், சேவாக், டாம் மூடி, ரவி சாஸ்திரி, பைபஸ் ஆகியோர் இறுதி பரிசீலனையில் உள்ளனர்” என்றார்.

×Close
×Close