முதல் இன்னிங்ஸில் 606 ரன்கள் குவித்த மகிழ்ச்சியில், பாகிஸ்தானை விரைவில் ஆல் அவுட் செய்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையோடு, ஹோட்டலில் இருந்து இலங்கை வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்தில், நாட்டின் அதிக இருக்கைகள் கொண்ட(27,000) மிகப்பெரிய ஸ்டேடியமான, லாகூரின் கடாஃபி ஸ்டேடியத்துக்கு, சரியாக 8.50 மணியளவில் கான்வாய் பாதுகாப்புடன் வந்திறங்கினர்.
அப்போது, இலங்கை வீரர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது, பேருந்து மீதும், கான்வாய் மீதும் சரமாரியாக இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பார்க்காத இலங்கை வீரர்கள் சிதறி ஓட, திக்கு தெரியாமல் பதட்டத்தில் சிக்கிய கேப்டன் மஹேலா ஜெயவர்தனே, திலன் சமரவீரா, குமார் சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், தரங்கா பரணவிதனா, சமிந்தா வாஸ் ஆகிய 6 வீரர்கள் காயமடைந்தனர். இதனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. இலங்கை நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது.
பின்னர் அனைத்து வீரர்களும் பத்திரமாக (உயிருடன்) மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் வாயிலாக உச்சக் கட்ட பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தானால் உடனடியாக கண்டுபிடிக்கவே முடியவில்லை.
பாதுகாப்பு குளறுபடியால் தாக்குதலும் நடத்தப்பட்டு, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளையும் பிடிக்க முடியாமல் போனதால், அதன்பின் பாகிஸ்தானுக்கு உலகின் எந்தவொரு கிரிக்கெட் நாடும் விளையாடச் செல்லவில்லை. பின், மூன்று மாதம் கழித்து தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் (Lashkar-e-Jhangvi – LeJ) இத்தாக்குதலை நடத்தி உள்ளனர் என்று ஒருவழியாக பாகிஸ்தான் கண்டுபிடித்தது. ஆனாலும், அவர்கள் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.
அதன்பின், ஏழு வருடங்கள் கழித்து, பாகிஸ்தானில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், அவர்கள் தான் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது கண்டறியப்பட்டது.
‘தீவிரவாதிகளை கொன்றுவிட்டோம்… இனி தயவு செய்து எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வாருங்கள்’ என்று பாகிஸ்தான் அழைக்க, ‘ஏது… கிரிக்கெட்டா! போங்கப்பு’ என்று தெறித்து ஓடின கிரிக்கெட் விளையாடும் உலக நாடுகள்.
இருப்பினும், கடந்த ஆண்டு(2017) இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுவதற்கு பாகிஸ்தான் செல்ல சம்மதித்து, சென்று விளையாடியும் காட்டியது. குறிப்பாக, மூன்றாவது டி20 போட்டி, தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெற்றது.
2009 மார்ச் 3ம் தேதி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதல், கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு தினமாக மாறியது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் நாட்டின் மீதான நம்பிக்கையை சவபெட்டிக்குள் புதைத்த நாளாகவும் உருமாறியது. இன்றளவும் அந்த நம்பிக்கையை மீட்க போராடி வருகிறது பாகிஸ்தான்.