எல்லோருக்கும் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். அப்படியே, நாம் பெரிதும் நேசிக்கும் விளையாட்டான கிரிக்கெட்டிற்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடி விடுவோம். அதுவும் ஒரு ஆச்சர்யத்துடன்!.
ஆம்! 141 ஆண்டுகளுக்கு முன்பாக 'டெஸ்ட்' கிரிக்கெட் முதன்முதலாக விளையாடப்பட்ட தினம் இன்று. 1877ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதின. உலகிலேயே விளையாடப்பட்ட முதல் டெஸ்ட் போட்டி இதுதான். ('அப்போ கிரிக்கெட்டே இது தான்யா!'-னு நீங்க சொல்றது கேட்குது). ஒரு மனிதனின் மன வலிமையையும், உடல் வலிமையையும் சோதிக்கும் விளையாட்டு இது என்பதாலேயே, இதற்கு 'டெஸ்ட்' கிரிக்கெட் என பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் இப்போட்டியில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தை, முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா வீழ்த்தி அசத்தியது. 45 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று சரித்திரத்தை தொடங்கி வைத்தது.
இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில், அதே மெல்பேர்ன் மைதானத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 100வது ஆண்டை கொண்டாடும் விதமாக, கடந்த 1977ம் ஆண்டு மார்ச் 12-17 வரை, அதே ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. முதல் டெஸ்ட் வென்றது போலவே, இதிலும் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.