scorecardresearch

சாம்பியன்ஸ் கோப்பை : வாரியத்தின் பிடிவாதமும் அனுபவத்தின் முத்திரையும்

சுப்ரபாலா இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளலாம் என்ற பச்சை விளக்கைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் (07 மே) பி.சி.சி.ஐ. காட்டியது. முக்கியமான ஒரு சர்வதேசப் போட்டியில் இந்தியா கலந்துகொள்வது ஏன் கேள்விக்குறியாக ஆனது என்பதன் பின்னணியைச் சற்றுப் பார்ப்போமா? சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி 1988-ல் தொடங்கியது. ஐ.சி.சி. உலகக் கோப்பைப் போட்டியைப் போல அல்லாமல் இது மிகவும் சுருக்கமான பதிப்பு. கிட்டத்தட்ட […]

சாம்பியன்ஸ் கோப்பை : வாரியத்தின் பிடிவாதமும் அனுபவத்தின் முத்திரையும்
சுப்ரபாலா

இங்கிலாந்தில் வரும் ஜூன் 1 முதல் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை 50-ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளலாம் என்ற பச்சை விளக்கைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் (07 மே) பி.சி.சி.ஐ. காட்டியது. முக்கியமான ஒரு சர்வதேசப் போட்டியில் இந்தியா கலந்துகொள்வது ஏன் கேள்விக்குறியாக ஆனது என்பதன் பின்னணியைச் சற்றுப் பார்ப்போமா?

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி 1988-ல் தொடங்கியது. ஐ.சி.சி. உலகக் கோப்பைப் போட்டியைப் போல அல்லாமல் இது மிகவும் சுருக்கமான பதிப்பு. கிட்டத்தட்ட நாக் அவுட் முறையில் நடத்தப்படுவது. முதலில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இது நடந்து வந்தது. 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தைப் பெறாத நாடுகளும் ஐ.சி.சி. உலகக் கோப்பைப் போட்டியில் கலந்துகொள்ளும்; ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தரமதிப்பில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியும். இதனால், தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்திய) கிரிக்கெட் அணியால் இந்த ஆண்டு இப்போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது.

பிசிசிஐயின் சிறப்புப் பொதுக்குழு தான் முன்பு கொண்டிருந்த வைராக்கிய நிலையிலிருந்து சற்று கீழே இறங்கி வந்து இந்தப் போட்டியில் இந்தியாவின் பங்கேற்பை உறுதி செய்துள்ளது. இந்தப் போட்டியில் கிடைக்கும் வருமானத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஐ.சி.சி. எடுத்த முடிவுதான் இந்திய வாரியத்தின் ஆட்சேபணைக்குக் காரணம். இந்த விஷயத்தில் இந்திய வாரியத்தின் வாதத்தில் நியாயம் இருந்தாலும் போட்டியைப் புறக்கணிக்குமளவுக்கு மோதல் போக்கில் நடந்துகொள்ளக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பும். உரிய நேரத்தில் அணியை அறிவிக்காமலும், ஐ.சி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பப்போவதாகவும் சொல்லிப் பிடிவாதம் பிடித்துக்கொண்டிடுந்த வாரியம் கடைசியில் தன் நிலையை மாற்றிக்கொண்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கெதிராக எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்போவதில்லை என்றும் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானித்தது.

என்றாலும் பிரச்சினை இன்னமும் முடியவில்லை. “சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் தேர்வை பிசிசிஐ கைவிட்டு விடவில்லை,” என்று கூறும் இந்திய வாரியத்தின் இணைச் செயலர் அமிதாப் சவுத்ரி, “சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட ஒப்புக் கொண்டதாலேயே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் / நிர்வாகம் குறித்த கருத்துக்களை நாம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்று பொருள் கொள்ள முடியாது,” என்கிறார்.

சிறப்புப் பொதுக்குழுவின் முடிவானது பதவிநீக்கம் செய்யப்பட்ட என். சீனிவாசன் தரப்பினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஸ்கைப் மூலம் விவாதத்தில் கலந்து கொண்ட சீனிவாசன் தன் வாதத்தை எடுத்துரைத்தபோதிலும் பிசிசிஐயின் முடிவை வெளிப்படையாக விமரிசனம் செய்யவில்லை. இந்தியா இப்போட்டியில் பங்கேற்பதை ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ராஜீவ் சுக்லா உறுதி செய்ததுடன் இம்முடிவில் மாற்றமேதும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து செல்வதற்குத் தயாரக்கும்படி அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவிடமும் கேப்டன் விராட் கோலியிடமும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் விவகாரங்களை நிர்வகிக்க இந்திய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் (COA) தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் புதிய திறமைக்குப் பதிலாக அனுபவத்துக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த் சஞ்சு சாம்சன் போன்ற திறமையாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை சுருக்கமான பதிப்பு என்பதால் அதில் பரிசோதனைகளுக்கு அதிக இடமிருக்காது என்பதால் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. தவிர, யுவராஜ் சிங் போன்ற மூத்த வீரர்களுக்கான இன்னொரு வாய்ப்பாகவும் இதைக் கருதலாம். இதன் பிறகு 2019-ல் நடக்கவிருக்கும் ஐ.சி.சி. உலகக் கோப்பைக்கான போட்டியைத் தயார்செய்ய வேண்டிய முயற்சியைத் தொடங்க வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் முடிவுகள் அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் பயணம் எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: The stubbornness of the board and the seal of experience

Best of Express