ஐபிஎல்-ல் இன்று அசத்தியது திருநெல்வேலி அல்(ல)வா...! பிளேஆஃபில் சன்ரைசர்ஸ்

எளிதான இலக்கை நோக்கி இறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, தொடக்கம் சற்று அதிர்ச்சியாக அமைந்தது..

நடப்பு ஐபிஎல் சாம்பியன்ஸ் அணிக்கு தொடர்ந்து நல்ல நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வேற யாரு…ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்குத் தான். கான்பூரில் இன்று நடந்த போட்டியில், ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10-வது ஐபிஎல் சீசனில் 2-வது அணியாக, 17 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றினை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் 18 புள்ளிகளுடன் பிளேஆஃப்க்கு தகுதி பெற்றுவிட்டது.

வானளவு தொடங்கி வண்டாக சுருங்கிப் போன குஜராத்:

டாஸ் வென்ற ஹைதராபாத், குஜராத்தை பேட்டிங் செய்யச் சொன்னது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மித் மற்றும் இளம் வீரர் இஷான் கிஷன், ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே ஓட விட்டனர். நம்பமாட்டீர்கள்… குஜராத் அணி, முதல் விக்கெட்டை இழந்த போது, அந்த அணி எடுத்திருந்த ஸ்கோர் 111. அதுவும் 10.5-வது ஓவரில். ரன்ரேட், ஓவருக்கு 10-க்கு மேல் சென்றுக் கொண்டிருந்தது.

33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் முதலில் அவுட்டாக, 61 ரன்கள் எடுத்திருந்த இஷான் அடுத்து வெளியேறினார். அதன்பின், ‘நான் வந்துட்டேன்னு சொல்லு…பின்னாடியே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்லு’ என்ற மோடில், வரிசையாக ஒவ்வொரு வீரர்களும் அவுட்டாகி வெளியேறினர். பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் ரெய்னாவோ 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும், ஃபின்ச் 2 ரன்னிலும் என, போட்டி போட்டுக் கொண்டு சிங்கிள் டிஜிட்டில் அவுட்டானார்கள்.

ஒருபக்கம் ஜடேஜா தேமேவெனா நின்றுக் கொண்டிருக்க, அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். குறிப்பாக, சிறந்த ஆல்ரவுண்டராக (லெமூரியா கண்டத்தில்) அறியப்பட்ட ஜேம்ஸ் ஃபால்க்னர், 8 ரன்னில் அவுட்டாகி, இம்முறையும் தன்னை அணியில் சேர்த்ததற்கான பலனை குஜராத் அணி நிர்வாகத்திற்கு வெளிப்படுத்தினார். (இப்போதான் ‘சாம்பியன்ஸ் லீக்’-ல இவரை ஏன் ஆஸி., அணி சேர்க்கலைனு!).

முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து திருப்திப்படுத்திக் கொண்டது.

கலக்கிய ‘திருநெல்வேலி’ பையன்:

வார்னரின் முகத்தில் ஆயிரம் வோல்ட்ஸ் பல்ப் எரிய, எளிதான இலக்கை நோக்கி இறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு, தொடக்கம் சற்று அதிர்ச்சியாக அமைந்தது. சமீப போட்டிகளில் ஃபார்முக்கு திரும்பியிருப்பதாக நம்பப்படும் தவான் 18 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.

இதன்பின், கேப்டன் டேவிட் வார்னரும், நம்ம திருநெல்வேலியைச் சேர்ந்த 26 வயதான ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரும் கூட்டணி அமைத்தனர். 2014-ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரேயொரு முறை மட்டும் விளையாடியுள்ள விஜய் ஷங்கர், மீண்டும் இன்று கிடைத்த வாய்ப்பை கெட்டியமாக பயன்படுத்திக் கொண்டார் என்றே தெரிகிறது.

அதற்கு ஏற்றவாறு இலக்கும் குறைவானதாக இருந்ததால், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த விஜய், 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். சிக்ஸர் ஏதும் அடிக்கவில்லை. (அதேபோல், வார்னரும் 52 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 18.1-வது ஓவரில் இலக்கை எட்டி, தனது பிளேஆஃப் சுற்றினை உறுதி செய்து, குஜராத் லயன்ஸ் அணிக்கு பிரியா விடை கொடுத்தது.

இப்போட்டியோடு குஜராத் அணி கலைக்கப்படுகிறது. அடுத்தவருடம் இந்த அணி விளையாடாது என்பது கூடுதல் தகவல்…! ஏன்னு உங்களுக்கு தெரியும்…தெரியும்தானே….? ஆங்!! சிஎஸ்கே….சிஎஸ்கே….சிஎஸ்கே…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close