ச. மார்ட்டின் ஜெயராஜ்
Pro Kabaddi League | Tamil Thalaivas: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் களமாடி வரும் சாகர் ரதி தலைமையிலான தமிழ் தலைவாஸ் இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2ல் வெற்றி, 7ல் தோல்வி என 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5வது பி.கே.எல் தொடரில் அறிமுகமானது. தொடக்க சீசனிலே அணி பலத்த பின்னடைவை சந்தித்தது. அதன்பிறகு நடந்த நடந்த 3 சீசன்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தான் பிடித்தது. ஆனால், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அணி, பயிற்சியாளர் அஷன் குமாரின் தலைமையில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும், அரையிறுதியில் போராடி தோல்வியுற்றது.
எனினும், இந்த சீசனில் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் போட்டிக்கு முன்னதாக நடந்த ஏலத்தில் செயல்பட்டது. நட்சத்திர வீரரான பவன் செராவத்தை அணியில் இருந்து வெளியேற்றி இருந்தாலும், ஏலத்தில் இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்களை வசப்படுத்தியது. இதனால், தமிழ் தலைவாஸ் ரசிகர்களும் அணி இந்த சீசனை புரட்டி போடும் என ஆவல் கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/6c8e550d-1e9.jpg)
மக்கள் நினைத்தபடியே தமிழ் தலைவாஸ் அதன் தொடக்க ஆட்டத்திலே 42-31 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி சீசனை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால், அடுத்த ஆட்டத்திலேயே 10 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸிடம் தமிழ் தலைவாஸ் வீழ்ந்தது. இதன்பின்னர், பவன் செராவத் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் சாய்த்து கம்பேக் கொடுத்தது.
தொடர்ந்து வெற்றிப் பாதையில் அணி பயணிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க, தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்தது. இதனால் தற்போது தமிழ் தலைவாஸ் எப்போது வெற்றிப் பாதைக்கு திரும்பும்? என்கிற சூழல் நிலவி வருகிறது. சென்னையில் சொந்த மைதானத்தில் நடந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட அணி வெற்றி பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மேலும் சோகத்தை கொண்டுவந்தது.
இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெறுமா? கடந்த சீசனில் வரலாறு படைத்த அணி இத்தகைய பின்னடைவை சந்திக்க காரணம் என்ன? வெற்றிப் பாதைக்கு திரும்ப அவர்கள் என்ன செய்ய வேண்டும்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதிலளித்தார் மூத்த பத்திரிகையாளரும், விளையாட்டு வர்ணனையாளருமான டி.என் ரகு.
அவரை நாம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்விகளை வினவியபோது, "தமிழ் தலைவாஸ் அணி சிறந்த அணிகளுள் ஒன்று. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால், அவர்கள் பதட்டத்துடன் விளையாடுகிறார்கள். அவர்களிடம் முதிர்ச்சி குறைவாக உள்ளது. முக்கிய கட்டத்தில் அவர்கள் சரியாக விளையாடுவதில்லை.
பெங்களூரு புல்ஸ் (38 - 37 தமிழ் தலைவாஸ்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (25 - 24 தமிழ் தலைவாஸ்) போன்ற அணிகளுடன் வெற்றி பெற்று இருக்கலாம். எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்த போட்டிகளை அவர்களுக்கு சரியாக முடிக்க தெரியவில்லை. இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. களத்தில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு லீடர் இல்லை. இக்கட்டான கட்டத்தில் களத்தில் முடிவு எடுக்க ஒரு நல்ல கேப்டன் வேண்டும்.
கடந்த சீசனில் பவன் செராவத் காயம் அடைந்து வெளியேறிய பிறகு, அணியிடம் இருந்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. அதனால், வீரர்கள் எந்த அழுத்தமும் இன்றி விளையாடினார்கள். இந்த சீசனில் நவீன் குமாரின் காயத்திற்குப் பிறகு டெல்லி அணி எப்படி விளையாடி வருகிறார்களோ, அப்படி தான் கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியினர் விளையாடினார்கள். நம்பிக்கையுடன் அழுத்தம் இல்லாமல் அவர்களால் விளையாட முடியவில்லை. இவைகள் தான் முக்கிய காரணங்களாக நான் பார்க்கிறேன்." என்று கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/80a7bbde-317.jpg)
கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் பயிற்சியாளர் அஷன் குமார். இந்த சீசனிலும் அவர் அணிக்கு பயிற்சியளித்து வரும் நிலையில், அவரது ஊக்கத்தில் அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் கனவு கோட்டை கட்டினார்கள். அது தற்போது தடிவிடு பொடியாகி வருவது குறித்து நாம் ரகுவிடம் கேட்கையில், "அவரிடமிருந்து ரசிகர்கள் நிறைய எதிர்பார்த்தார்கள். அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. முதல் சீசனிலே அவரால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என நினைத்தார்கள்.
'மேலே சென்று விடலாம், ஆனால் அங்கேயே இருப்பது கஷ்டம்' என்கிற பழமொழிக்கு ஏற்ப தான் இப்போது அணிக்கு நடக்கிறது. ஏனென்றால், கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய நரேந்தர் யாரும் தெரியாத திறமையாக இருந்தார். இப்போது அவரது பலம், பலவீனம் குறித்து எதிரணியினருக்கு தெரிந்து விட்டது. கடந்த சீசனில் அவர் 243 புள்ளிகளை எடுத்திருந்தார். அதை திரும்ப எடுப்பதில் ரொம்பவே கடினமாகிவிட்டது.
என்னைப் பொறுத்தவரையில், தமிழ் தலைவாஸ் 11வது இடத்தில் இருக்க வேண்டிய அணியே இல்லை. ஆனால், அவர்கள் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி நல்ல நிலைக்கு திரும்பலாம். கொஞ்சம் முதிர்ச்சியுடன் விளையாட வேண்டும். பதட்டம் இல்லாமல் ஆட வேண்டும். போட்ட போட்டியாக இருக்கும் போட்டிகளை எப்படி ஜெயிக்கனும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான திட்டத்துடன் அவர்கள் வர வேண்டும். பின்தங்கி இருக்கும் போட்டியில் அவர்கள் மெதுவாக ஆடுகிறார்கள். அந்த மாதிரியான போட்டிகளில் அவர்கள் இன்னும் துடிப்பாக விளையாட வேண்டும். அணி 10 புள்ளிகள் முன்னிலையில் இருந்தால் மெதுவாக ஆடலாம். இதையெல்லாம் அவர்கள் சரி செய்ய வேண்டும்." என்று அவர் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/7b099baf-907.jpg)
இந்த சீசனில் எந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து அவர் கூறுகையில், "புனேரி பல்டன் நிச்சயம் பிளேஆஃப்க்கு முன்னேறி விடுவார்கள். அதேபோல், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் பிளேஆஃப்க்குள் நுழைந்து விடுவார்கள். மற்ற இடங்களுக்கு இன்னும் போட்டி நிலவி வருகிறது. போட்டிகளை பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று ரகு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“