5 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்து ’‘நோ-பால்“... த்ரில் வெற்றியை ருசித்த கோவை கிங்ஸ்!

பந்து ஆடுகளத்திலேயே கிடந்த நிலையில், அந்த பந்து ‘நோ-பால்’ ஆனாது. இந்த குழப்பத்திற்கு இடையே கோவை பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் எடுத்து விட்டனர்....

டி.என்.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோவை அணி, திருவள்ளூர் அணியை வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் 25-வது லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், திருவள்ளூர் வீரன்ஸ் அணி, கோவை கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகிய முரளிவிஜய், இந்த சீசனில் முதல் முறையாக கோவை அணிக்காக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் முரளி விஜய் பந்துவீச்சை தேர்வு செய்தார். திருவள்ளூர் அணியின் தொடக்க வீரர்களாக சித்தார்த், சதுர்வேத் களம் இறங்கினனர். சித்தார்த் 18 ரன்னிலும், சதுர்வேத் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் அபரஜித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 99-ஆக இருந்தது. அப்போது, ஹரி நிஷாந்த் 27 ரன்களில் அவுட் ஆனார்.

அதன் பிறகு கேப்டன் பாபா அபராஜித்தும், அபிஷேக் தன்வாரும் இணைந்து கோவை அணியை மிரள வைத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பபட்ட 20 ஓவர்களிர்ல திருவள்ளூர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் இது தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

பாபா அபராஜித் 60 ரன்கள் (31 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அபிஷேக் தன்வார் 55 ரன்களும் (22 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), கவின் 6 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெற்றிக்கு மிகப்பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்ற நிலையில், கோவை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் முரளி விஜய், சூர்யபிரகாஷ் ஆகியோர் களம் இறங்கினர். சுர்ய பிரகாஷ் 5 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து, கேப்டன் முரளிவிஜயும், அனிருத் சீத்தா அதிரடி காட்டவே, அணியின் ஸ்கோர் எகிறியது.

12.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 120 ரன்களாக இருந்தது. அப்போது, முரளி விஜய் 69(44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்ஸர்) ரன்களில் ஆட்டமிழந்தார்.

கோவை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் வீசினார்.

முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன. 3-வது பந்தில் சீனிவாசன் 34 ரன்களில்(24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து, 4-வது பந்தில் 2 ரன்னும், 5-வது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டன.

கடைசி பந்தில் கோவை அணியின் வெற்றிக்கு 5 ரன் என்ற நிலை ஏற்பட்டது.
பரபரப்புக்கு மத்தியில் இறுதி பந்தை எதிர்கொண்ட அனிருத் சீத்தா ராம், அந்த பந்தை அடிக்க தவறிவிட்டார்.

பந்து ஆடுகளத்திலேயே கிடந்த நிலையில், அந்த பந்து ‘நோ-பால்’ ஆனாது. இந்த குழப்பத்திற்கு இடையே கோவை பேட்ஸ்மேன்கள் 2 ரன்கள் எடுத்து விட்டனர். மேலும் ‘எக்ஸ்டிரா’ வகையில் ஒரு ரன் கிடைத்தது.

கடைசி பந்து, ‘பிரிஹிட்’என்ற நிலையில், கோவை அணி கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

கோவை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. கோவை அணியில், அனிருத் சீத்தாராம் 69 ரன்களுடன் (43 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார்.

6 போட்டிகளில் விளையாடியுள்ள கோவை அணி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டை என்று 6 புள்ளியுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. நாளைய கடைசி லீக்கில் திருச்சி அணியை கோவை அணி வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறிவிடும்.

திருவள்ளூர் அணி 6 புள்ளியுடன் உள்ளது. அடுத்து நடைபெறும் போட்டிகளில் சில முடிவுகள் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டம் இருந்தால் அந்த அணி முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

×Close
×Close