பரபரப்பாக நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
லீக் போட்டிகள், பிளே ஆஃப், தகுதி சுற்றுப் போட்டிகள் என அனைத்தும் முடிவடைந்த நிலையில், தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய வாஷிங்டன் சுந்தர், 14 ரன்கள் எடுத்த நிலையில் சதீஷ் பந்து வீச்சில் சாய்கிஷோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அசுது களமிறங்கிய அபினவ் முகுந்த், கவுசிக் காந்தியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ஆனால், அணியின் ஸ்கோர் 52 ரன்களை எட்டிய போது கவுசிக் காந்தி அவுட்டானார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை தூத்துக்குடி அணி எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபினவ் முகுந்த் 38 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அருண்குமார், சாய் கிஷோர் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சற்குணமும், கோபிநாத்தும் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் திரட்டினர். சற்குணம் 16 ரன்கள் எடுத்த போது கேட்ச் கொடுத்து வெளியேறினார். அரை சதம் எடுத்த கோபிநாத்தும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தூத்துக்குடி அணியின் சிறப்பான பவுலிங்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சற்றே திணறிய நிலையில், கேப்டன் சதீஸ், சரவணன் இணை களமிறங்கி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதன் மூலம் 19 ஓவர்களில் 4விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கோப்பையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தட்டிச்சென்றது. சதீஸ், சரவணன் ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டூட்டி பேட்ரியாட்ஸ் அணித் தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
10 பந்துகளில் 23 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்த சத்திய மூர்த்தி சரவணன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களோடு 459 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி பேட்ரியாட்சுக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.