தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.
இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருவள்ளூர் வீரன்ஸ் ஆகிய அணிகள் மோதின. நெல்லையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, முதலில் பேட் செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய திங்குக்கள் அணி, முதல் பந்திலேயே சுப்பிரமணிய சிவாவின் விக்கெட்டை பறிகொடுத்து. அடுத்தடுத்து, விக்கெட்டுகளை இழந்த திண்டுக்கல் அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் அணி வீரர்கள், கங்கா ஸ்ரீதர் ராஜூ 17 ரன்னிலும், ஜெகதீசன் 12 ரன்னிலும், முருகன் அஸ்வின் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக வெங்கட்டராமன் 19 ரன்கள் எடுத்தார். திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரஹில் ஷா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய திருவள்ளூர் வீரன்ஸ் அணி, 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக சித்தார்த் 37 ரன்களும், கேப்டன் பாபா அபராஜித் ஆட்டமிழக்காமல் 2 சிக்சருடன் 28 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாவது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். அதேசமயம் தனது முதல் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் தோற்றிருந்த திருவள்ளூர் வீரன்சுக்கு இது முதல் வெற்றியாகும்.