டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி தூத்துக்குடி அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
8 அணிகள் இடையிலான 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணி மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
12.1 ஓவர்களில் ஸ்கோர் 107 ரன்களாக இருந்தபோது அலெக்சாண்டரின் பந்து வீச்சில் கவுசிக் காந்தி 35 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து வந்த ஆனந்த் 13 ரன்னில் அவுட் ஆனார்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தபோதிலும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 59 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 107 ரன்களில் (61 பந்து, 11 பவுண்டரி, 4 சிக்சர்)ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் இரு சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு திருவள்ளூர் வீரன்ஸ் வீரர் பாபா அபராஜித் சதம் (118 ரன்) அடித்தது நினைவில் இருக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து.
கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கோபிநாத்தும், கேப்டன் சதீசும் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். சதீஷ் ரன் ஏதும் எடுக்காமலும், கோபிநாத் 1 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், 20 ஓவர்களின் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீசால் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.