International sports Photographer Seshadri sukumar Tamil News: நம்முடைய வாழ்வின் அழகான தருணங்களை, நீங்காத நினைவுகளாக பதிய வைப்பவை புகைப்படங்கள். எனினும், அந்த அழகிய தருணங்களை 'க்ளிக்' செய்த சிலராலே அந்த துறையில் ஜொலிக்க முடிகிறது. அந்த வகையில் நாம் வழக்கமாக பார்க்கும் கேமரா லென்ஸ்களை கலைக்கண்ணோட்டத்தோடு பார்த்து அற்புதமான தருணங்களை நம் கண்முன் நிறுத்தியுள்ளார் மூத்த புகைப்படக்காரர் சுகுமார்.
சென்னையைச் சேர்த்த பிரபல ஸ்போர்ட்ஸ் புகைப்படக்காரரான சேஷாத்ரி சுகுமார், இதுவரை 4 ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். கிரிக்கெட், கால்பந்து, கார் பந்தயம், டென்னிஸ், செஸ், என பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், இந்த விளையாட்டுகளில் முன்னணி வீரர்களாக வலம் வரும் பலரையும் தனது லென்ஸ் மூலம் க்ளிக் செய்து புருவம் உயர செய்திருக்கிறார்.
தன்னுடை வாழ்க்கை பயணம் குறித்து (தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்) நம்மிடம் பகிர்ந்துள்ள அவர், புகைப்படம் எடுப்பவர்களையே எற இறங்க பார்க்கும் அந்த கால கட்டத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் புகைப்படக்காரராக வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 1978ம் ஆண்டு புகைப்படத் துறையில் தான் காலடி எடுத்து வைத்ததாகவும், 1984ம் ஆண்டு முதல் விளையாட்டு துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 2000ம் ஆண்டு முதல் சர்வதே அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்ததாகவும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
"2000ம் ஆண்டு முதலே சர்வதே அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று புகைப்படம் எடுத்து வருகிறேன். எனது முதல் சர்வதேச போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் தான். அது முதல் பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். முன்னணி வீரர்கள் உசேன் போல்ட், ரோஜர் ஃபெடரர், செரினா வில்லியம்ஸ், மெஸ்ஸி, ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் மரடோனா இணைந்த புகைப்படம் என ஏராளமான புகைப்படங்களை எடுத்துள்ளேன்."
சமீபத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தனது புகைப்படங்களால் பல லட்ச பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ள சுகுமார், அந்த அனுபவம் பற்றி நம்மிடம் அவர் பேசுகையில், "ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை புகைப்படம் எடுக்க இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட 3 போட்டோகிராபர்களில் நானும் ஒருவன். எப்போதும் அரங்கு கொள்ளாத பார்வையாளர்களின் கரகோஷத்துடன் புகைப்படம் எடுத்து பழகிய எனக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. இதற்கு காரணம்… கொரோனா.
டோக்கியோ செல்வதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே கொரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ள சொன்னார்கள். அதன்படி சீரான இடைவெளியில் டெஸ்ட் எடுத்து அனுப்பினேன். டோக்கியோ விமான நிலையத்தில் இறங்கியதும் என்னை அரை நாள் சோதித்தனர். பின்னர் தனி அறையில் தங்க வைக்கப்பட்டேன்.
ஒலிம்பிக் என்பது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. ஆனால் இம்முறை அது 5 ஆண்டாக மாறிப்போனது. இது சில வீரர்களுக்கு தங்களை மேம்படுத்த உதவி இருக்கும். ஆனால் சில வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும். இருப்பினும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுமே தங்களின் முழு முயற்சியை மேற்கொண்டதை என்னால் பார்க்க முடிந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள், வென்றவர்கள் என அனைவருமே வியப்பை ஏற்படுத்தினர்.
நமது வீரர்கள் கலந்து கொண்ட விளையாட்டுகளில் மிக ஆர்வமாக பங்கேற்றனர். பலர் பதக்கம் வென்று அசத்தினர். அவர்களை வித்தியாசமாக படமெடுத்தேன். குறிப்பாக வில்வித்தை வீராங்கனை தீபிகாவிடம் இருந்து அம்பு பறப்பதை ஒரு சேலஞ்சாக எடுத்து கொண்டு அதை திறம்பட பதிவு செய்தேன்.
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலே சிறப்பாக எறிந்து அசத்தினார். நிச்சயம் அவர் பதக்கம் வெல்வார் என தெரிந்து கொண்ட நான் அவரை நிறைய படங்கள் எடுத்தேன். மறுநாள் அவரை நேரில் சந்தித்து அவர் சம்பந்தப்பட்ட படங்களை காண்பித்தேன். அவர் மகிழ்ச்சியில் திழைத்துப்போனார். பிறகு எனது கேமிராவை வாங்கி சில புகைப்படங்களை க்ளிக் செய்து மகிழ்ந்தார்." என்று கூறியுள்ளார்.
புகைப்படத்துறை குறித்து நம்மிடம் பேசியுள்ள சுகுமார், எந்த துறையாக இருந்தாலும் ஒருவருக்கு அங்கீகாரம் என்பது மிகவும் முக்கியம். அவை தான் நம்மை தொடர்ந்து உழைக்க ஊக்கப்படுத்துகின்றன என்றுள்ளார். ஆனால், அவை சில நேரங்களில் தனக்கு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளர். எனினும் அவரின் தொடர் உழைப்புக்கு பரிசாக 2016ம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் சிறந்த புகைப்படக்காரருக்கான தங்க பதக்கத்தை அமெரிக்காவின் போட்டோகிராஃபிக் சொசைட்டியிடமிருந்து பெற்றார். மேலும், சிறந்த சர்வதேச புகைப்படக்காரருக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றார்.
அவரது புகைப்படங்களுக்கு எண்ணற்ற மக்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வரும் நிலையில், சச்சின் தனது சுயசரிதைக்கான புத்தகத்தில் அட்டைப்படமாக இவர் எடுத்த புகைப்படத்தை உபயோகித்து பெருமைப் படுத்தியுள்ளார். இது தனது திறமைக்கு கிடைத்த சான்று என்றும், வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது இந்த திறனை இளம் தலைமுறையினருக்கு கடத்த முயற்சி எடுத்து வரும் சுகுமார், பள்ளி மாணவர்களுக்கு என கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகளை அவ்வப்போது நடத்தி வருகிறார். இதுவரை 1000 மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்று பயனடைந்து உள்ளார்கள் என்றும், அடுத்ததாக 2000 மாணவர்களுக்கான பயிற்சியை தொடங்க உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்துள்ளார். "இந்த வகுப்புகளில் முன்னணி புகைப்பட நிபுணர்கள் கலந்து கொள்வார்கள். பிரபல கேமரா நிறுவனமான கேனான் 'canon' உதவி செய்ய உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்துறையில் ஆர்வமாக உள்ள இளம் தலைமுறைக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன? என நாம் அவரிடம் வினவியபோது, "நீங்கள் எது செய்தாலும் கவனத்துடனுடன் (ஃபோகஸ்ஸுடன்), அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். எல்லாம் நேர்மறையாக நடக்கும்." எனக் கூறுகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நாடு திரும்பியுள்ள சுகுமார் இந்தாண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார். இந்த தொடரிலும் நினைவில் நீங்கா புகைப்படங்களை க்ளிக் செய்வார் என நம்பலாம்.
சர்வதேச ஸ்போர்ட்ஸ் புகைப்படக்காரர் எஸ். சுகுமாரின் புகைப்பட தொகுப்புகள்:-
சுகுமார் பெற்ற விருதுகளின் பட்டியல்:
டோக்கியோ ஒலிம்பிக்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.