செக்(Czech) நாட்டின் தாமஸ் பெர்டிச் மற்றும் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்கியோஸ் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த சீசனில் தங்களது போட்டிகளை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். 12 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் நோவாக் ஜோகோவிச், மூன்று முறை பெரிய தொடர்களை வென்றுள்ள ஸ்டான் வாவ்ரிங்கா, கெய் நிஷிகோரி மற்றும் மிலோஸ் ரொனிக் ஆகியோரும் 2017-ல் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். கடந்த விம்பிள்டனில் இருந்து உலகின் மூன்றாம் தர வீரரான ஆண்டி முர்ரேவும் விளையாடாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், உலகின் 18-ஆம் தர நிலை வீரரான பெர்டிச், வியன்னா மற்றும் பாரீஸ் தொடர்களை முதுகு வலிகள் காரணமாக தான் விளையாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து 32 வயதான பெர்டிச் தனது ட்விட்டரில், "விம்பிள்டன் தொடரில் இருந்தே முதுகு வலியுடன் நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். பெய்ஜிங்கில் கடைசி ஆட்டத்தின் போது, எனது நிலைமை மோசமாவதை உணர்ந்தேன். எனது மருத்துவக் குழு நான் சில வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அப்போது நான் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறேன். முற்றிலுமாக எனது வலியில் இருந்து வெளிபட விரும்புகிறேன். அதன்பின், 2018-ல் தொடங்கும் தொடர்களில் எந்தவித வலியும் இன்றி விளையாடுவேன்" என்றார்.
அதேபோல் 22 வயதான கைர்கியோஸ், இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறார். உலகின் 20-ஆம் நிலை வீரராக திகழும் இவர், இந்த வருடத்தில் நடந்த அனைத்து கிராட் ஸ்லாம்ஸிலும் இரண்டாவது சுற்றை கூட தாண்ட முடியாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "எதிர்பாராதவிதமாக, இடுப்பு வலியால் நான் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால், இந்த சீசனில் எனது போட்டிகளை நான் ரத்து செய்துள்ளேன். அதன்பின், ஆஸ்திரேலிய சம்மரில் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், "இந்தாண்டு நான் நினைத்து போல் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக, ஸ்லாம்ஸ்களில் நான் ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும், பல நல்ல விஷயங்களும் இந்தாண்டு நடந்துள்ளது. 2018-ல் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.