ஒருகாலத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி என்றால், மற்ற அணிகள் கதிகலங்கும். வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை இதை. வரலாறு தெரிந்தவர்களுக்கு புரியும், வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படி இருந்தது என்று. வெஸ்ட் இண்டீஸ் அணி பார்படாஸ், கயானா, ஜமைக்கா, ட்ரினிடட் & டொபாகோ, லீவார்ட் தீவுகள் மற்றும் வின்ட்வார்ட் தீவுகள் என்ற ஆறு கிரிக்கெட் சங்கங்களை உள்ளடக்கியது.
இதில், ஜமைக்கா அணி மிக முக்கியமானது. மைக்கேல் ஹோல்டிங், ஜிம்மி ஆடம்ஸ், கெரி அலெக்சாண்டர், கோர்ட்னி வால்ஷ், க்ரிஸ் கெயில், மார்லன் சாம்யூல்ஸ், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஜமைக்காவில் இருந்து வந்த டாப் கிரிக்கெட் வீரர்களே. ஆனால், கடந்த சில வருடங்களாக ஜமைக்காவில் இருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாக்கப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் 'டேவ் கேமரோன்' அளித்துள்ள பேட்டியில், "ஜமைக்காவில் உள்ள பள்ளிகளில் பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பெண்களாக உள்ளனர். அவர்களுக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியவில்லை. கிரிக்கெட் புரியவும் இல்லை, அதில் ஆர்வமும் இல்லை. ஆனால், பெண்கள் தான் உடற்கல்வி ஆசிரியர்களாக பள்ளிகளில் உள்ளனர். இவர்கள் எப்படி கிரிக்கெட்டை மாணவர்களுக்கு கற்றுத் தருவார்கள்?. இதில் நான் அரசாங்கத்தை குறை கூற விரும்பவில்லை.
சரி! ஏன் இவர்கள் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதில்லை என்று ஆராய்ந்து பார்த்தால், 'கிரிக்கெட் விளையாட பெரிய அளவில் இடம் வேண்டும்' என்கிறார்கள். இடம் பற்றாக்குறையால் தான் கிரிக்கெட்டை தவிர்ப்பதாக அந்த ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஒரு சிறிய தெருவாக இருந்தால் கூட, இரு எல்லைகளை நிர்ணயித்துக் கொண்டு கால்பந்து ஆட முடியும். உயரத்தில் டயர்களை கட்டி கூடைப்பந்து ஆட முடியும். குறுக்கே கயிற்றை கட்டி வாலிபால் கூட ஆட முடியும். ஆனால், இடம் அதிகமாக இருந்தால் மட்டுமே கிரிக்கெட் விளையாட முடியும்' என பெண் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கூறுகிறார்கள் என்றார்.
இப்படியே போனால், மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய ஜமைக்கா அணி, சாதாரணமான ஒரு அணியாக மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. எனவே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து, அங்கு கிரிக்கெட்டை வளர்ப்பதற்கான சில ஆக்கப்பூர்வ பணிகளை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது" என்று டேவ் கேமரோன் தெரிவித்துள்ளார்.
ஒரு போஸ்ட் மரம் போதுமே ஸ்டெம்ப் வரைஞ்சு கிரிக்கெட் விளையாட!!.