ச. மார்ட்டின் ஜெயராஜ்
cricket news: 'சிக்ஸ்' அடிப்பது கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆட்டத்தை மாற்றும் தருணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. டி-20 போட்டி அறிமுகத்திற்குப் பிறகு ஒவ்வொரு வீரரும் உலகெங்கிலும் சிக்ஸர் அடிக்கும் திறனை மேம்படுத்தியுள்ளனர். ஒரு பந்தில் ஒரு பேட்டர் பெறக்கூடிய அதிகபட்ச ரன்களைப் பெற சிக்சர் உதவுகிறது. இதனைப் பவுண்டரி கோட்டிற்கு மேல் பறக்க விடுவதற்கு சிறந்த அனுபவமும், சக்தியும், நேரமும் தேவை.
பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி மற்றும் ஏ.பி டி வில்லியர்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் தங்களின் அபாரமான சிக்ஸர் பறக்கவிடும் திறன்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களுக்கென தனி முத்திரையை பதித்துள்ளனர். இவர்களின் பெயர்களை கேட்டலே பல பவுலர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும். ஏனெனில், இந்த வீரர்கள் பவர்-ஹிட்டர்களாக இருக்கிறார்கள், அவர்கள் கிரீஸில் இருப்பது எதிரணி பவுலர்களுக்கு ஒரு வித அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டு வருகிறது.
அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
5. மார்ட்டின் குப்டில் (நியூசிலாந்து) – 383 சிக்ஸர்கள்:
நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில் அதிரடியாக மட்டையைச் சுழற்றுவதில் மன்னாதி மன்னன் எனலாம். ஒயிட் பால் கிரிக்கெட்டில் பெரிய ஷாட்களை விளையாடுவதற்கு பெயர் போனவர். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 383 சிக்ஸர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் 5வது முன்னணி சிக்ஸர் ஹிட்டராக உள்ளார்.
கப்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 சிக்சர்களையும், ஒருநாள் போட்டிகளில் 187 சிக்ஸர்களையும், டி20 கிரிக்கெட்டில் 173 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார். குறிப்பாக, டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்களில் இரண்டாவது முன்னணி பேட்டராக கப்டில் உள்ளார். முதலிலடத்தில் 182 சிக்ஸர்களுடன் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளார்.
4. பிராண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) – 398 சிக்ஸர்கள்:
தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான பிராண்டன் மெக்கல்லம் சர்வதேச கிரிக்கெட்டில் 398 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். பேஸ்பால் கிரிக்கெட்டை தூக்கிப் பிடிக்கும் அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் மூன்று வீரர்களில் முதலிடத்தில் இருக்கிறார்.
மெக்கல்லம் டெஸ்டில் 107 சிக்ஸர்களும், ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் இருந்து 91 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மெக்கலமின் ஆக்ரோஷமான அதிரடி ஆட்டம் இன்றளவும் உலக கிரிக்கெட்டில் பிரமிப்பூட்டும் ஒன்றாக இருக்கிறது.
3. ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) – 476 சிக்ஸர்கள்:
'பூம் பூம் அப்ரிடி' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை ஸ்டேடியத்திற்கு வெளியே பந்தை அடித்து நொறுக்கியுள்ளார். பிராண்டன் மெக்கலத்தைப் போலவே, பாகிஸ்தான் ஆல்ரவுண்டரான அப்ரிடி, ஆடுகளம் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு என யாருக்கும் பயப்படவே மாட்டார். தான் ஆடிய மைதானங்களில் எல்லாம் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்.
ஷாஹித் அப்ரி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 476 சிக்சர்களை விளாசியுள்ளார். டெஸ்டில் 52 சிக்சர்களும், ஒருநாள் போட்டிகளில் 351 சிக்ஸர்களும், டி20-யில் 73 சிக்ஸர்களும் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் சிக்சர் அடித்தவர்களில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.
2. கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) – 553 சிக்ஸர்கள்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல், ரோகித் சர்மா முந்துவதற்கு முன்பு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த உலகின் முன்னணி பேட்டராக இருந்தார். அவரது `மஸில் பவர்' மூலம் பல பந்துவீச்சாளர்களை ஓட விட்டுள்ளார். குறிப்பாக, ஐ.பி.எல் போட்டிகளின் போது அவர் காட்டும் சிக்ஸர் வாண வேடிக்கை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். அதேநேரத்தில் அவருக்கு பந்துவீசும் பவுலர்களின் தொடை நடுங்கும்.
'சிக்ஸர் மன்னன்' கெய்ல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 98 டெஸ்ட் சிக்ஸர்கள், 331 ஒருநாள் சிக்ஸர்கள் மற்றும் 124 டி20 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் அவர் டி20-யில் பல்வேறு நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடி 1056 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.
1. ரோகித் சர்மா (இந்தியா) – 601 சிக்ஸர்கள்:
'ஹிட்மேன்' என்று இந்திய ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் நடந்த ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே டெல்லியில் நடந்த போட்டியில் ரோகித் கிறிஸ் கெய்லை முந்தி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்கிற பெருமையைப் பெற்றார்.
இந்த போட்டிக்கு முன், அவர் கெய்லை முந்த இரண்டு சிக்ஸர்கள் பின்னால் இருந்தார். அந்தப் போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசிய ரோகித் யுனிவர்ஸ் பாஸை முந்தி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் ஆனார். ரோகித் சர்மா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 601 சிக்ஸர்களை அடித்துள்ளார் (ஒரு நாள் போட்டிகளில் 323, டெஸ்ட்டில் 84 மற்றும் டி20 போட்டிகளில் 190). ஐ.பி.எல் போட்டிகளில் 257 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.