அன்பரசன் ஞானமணி
இந்திய கிரிக்கெட்டில் 2017ம் ஆண்டு அதிகம் சலசலக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
5) இனியும் தோனி அணிக்கு தேவையா?
அதாங்க! நம்ம 'தல' தோனி மீதான சில முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் விமர்சனம் தான் 2017ம் ஆண்டு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. (வருஷா வருஷம் அதைத் தான் விவாதிக்குறாங்க-னு சொல்றீங்களா!). என்னதான், தல மின்னல் வேகத்தில் ரன்னிங் ஓடினாலும், ஸ்டெம்பிங் செய்தாலும், சில சமயங்களில் பேட்டிங்கில் அதிரடி சரவெடி காட்டாமல் போனதால், முன்னாள் வீரர்கள் சிலர் தோனியை விமர்சித்தனர்.
குறிப்பாக அகர்கர் கூறுகையில், "இந்திய அணி வேறொரு நல்ல வீரரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. தோனி கேப்டனாக இருந்தால் அவரது பேட்டிங்கில் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இந்தியா இப்போது அவர் கேப்டன்சியை நம்பி இல்லை. பேட்டிங்கை நம்பி இருக்கிறது. அதை அவர் பூர்த்தி செய்வதில்லை" என்று காட்டமாக விமர்சித்தார்.
அகர்கர் மட்டுமல்ல லக்ஷ்மண், ஆகாஷ் சோப்ரா போன்ற வீரர்களும் தோனியை விமர்சித்தனர். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம், ஒருமுறை கூட தோனியை விட்டுக் கொடுத்ததேயில்லை. யார் தோனியை விமர்சித்தாலும், விமர்சித்தவர்களை வச்சு செய்தனர். அதேபோன்று, கேப்டன் விராட் கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரியின் ஆதரவு தோனிக்கு பக்க பலமாக இருப்பதால், புது வருடத்தில் தல மாஸ் காட்ட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
4) விக்ரம் - வேதா எங்கப்பா!?
நம்ம அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு தான் இந்த பில்டப். இருவரும் அதுக்கு தகுதியானவர்கள் தானே... ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இருவருக்கும் இந்திய அணியில், குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவேயில்லை. ஜூன் - ஜூலையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர் தான் இவர்கள் விளையாடிய கடைசி தொடர். அதன் பிறகு, இன்று வரை அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் டெஸ்ட் தொடர்களை தவிர அணியில் இடம் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு பதில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய இருவரையும் களமிறக்கியது பிசிசிஐ. இவர்கள் தங்களை நிரூபித்து வந்தாலும், அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு தற்போது இணையாக முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், இவர்கள் இருவரும் தோனியின் சகாக்கள் என்பதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஓரம்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. தோனி கேப்டனான புதிதில், அப்போது அணியில் இருந்த சில மூத்த வீரர்களை, மோசமான பெர்ஃபாமன்ஸ் காரணமாக அணியில் இருந்து நீக்கினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பீக் ஃபார்மில் இருந்த அஷ்வின், ஜடேஜாவை கேப்டன் கோலி - கோச் ரவி சாஸ்திரி இணை தொடர்ந்து நீக்கி வருவது சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் படிக்க: இப்படியெல்லாம் கூட இந்தியா தோற்றிருக்கிறதா? 2017-ல் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த 'டாப் 5' தோல்விகள்!
3) பிசிசிஐ-க்கு ஒண்ணுமே தெரியல!
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இலங்கை தொடருக்கு முன்பாக நடந்த பிரஸ் மீட்டில், கேப்டன் விராட் கோலி சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு அதிர்ந்தே போய்விட்டது பிசிசிஐ. 'அவரு தெளிவா பேசுலயா?..... இல்ல அவரு பேசுவது நமக்கு தெளிவா புரியலையா?-னு' பெரிதாக கன்ஃப்யூஸ் ஆகிவிட்டது பிசிசிஐ.
அப்படி என்ன சொன்னார் கோலி? செய்தியாளர் ஒருவர், "போன முறை தான் இந்திய அணி இலங்கை சென்று விளையாடி வந்தது. இப்போது மீண்டும் அவர்கள் இங்கு வந்து விளையாடுகிறார்கள். இந்த தொடர் தேவைதானா?" என்று கேள்வி எழுப்ப, இதுதான் சரியான தருணம் என்று அதற்கு பதிலளித்த கோலி, "பிசிசிஐ-யிடம் ஒழுங்கான திட்டமிடல் இல்லை. இந்த இலங்கை தொடர் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட வேண்டும். இதுபோன்ற மோசமான திட்டமிடலால் அணியின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், அட்டவணைப்படி நாங்கள் விளையாட வேண்டும். அது எங்கள் கடமை" என்று குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல கோலி பதில் சொல்ல, ஷாக் ஆனது பிசிசிஐ.
அதன்பிறகு, நடந்த பிசிசிஐ நிர்வாகிகள் சிறப்புக் கூட்டத்தில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா விளையாடவிருந்த போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்தது.
2) தலைக்கு நேரா வந்த கல், ஜஸ்ட் மிஸ்!
2017 அக்டோபர் மாதம் 11ம் தேதி, குவஹாத்தியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடிய டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 118 ரன்களில் சுருண்டு தோற்றது. இதை இந்திய வீரர்களே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், ரசிகர்கள் அதனை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை குவஹாத்தியில் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்ததால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பியது. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அன்றைய ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் நாயகர்கள் தங்கள் மண்ணில் விளையாடுவதை பார்க்க மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி தோற்றதால் அவர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகினர்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின், ஆஸி., வீரர்கள் தங்கள் பேருந்தில் ஏறி ஹோட்டலுக்கு செல்லத் தயாரானார்கள். அப்போது, அந்த பேருந்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதனால் பீதிக்குள்ளான ஆஸி., வீரர்களை, பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். பேருந்து தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படத்தை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது பயத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதற்கு அசாம் கிரிக்கெட் சங்கம் பகிரங்க மன்னிப்பு கேட்டது.
1) எனக்கு இவர பிடிக்கல... நா இவரோட 'டூ'...! தம்பி நீ இன்னும் வளரணும்!
இந்திய கிரிக்கெட்டில் இந்தப் பஞ்சாயத்து தான் 2017ம் வருடத்தின் டாப் லிஸ்ட்டில் உள்ளது. வேற யாருக்கு? கேப்டன் விராட் கோலிக்கும், முன்னாள் கோச் அனில் கும்ப்ளேவுக்கும் தான்.
'எங்களை ஸ்கூல் பிள்ளைகள் போல் நடத்துகிறார்' என்பதுதான், கும்ப்ளே மீது பிசிசிஐ-யிடம் கோலி வைத்த குற்றச்சாட்டு. இதனால் கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்திய அணியின் மற்ற வீரர்கள் இதை சைலண்டாக வேடிக்கை பார்க்க, சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் தானாக பதவி விலகினார் கும்ப்ளே. போகும்போது, “கடந்த ஒருவருடமாக இந்திய அணி பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்” என்று பாராட்டி தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனமாக இருந்தது. 2016-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார். அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது. என்னதான் கோபம், வெறுப்புகள் இருந்தாலும், இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக கோலி நடந்து கொண்டது குறித்து பிசிசிஐ எதுவும் கருத்து கூறாமல் ‘கப்சிப்’ மோடிலேயே இருந்தது.
இந்த விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும். கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதற்கும் பிசிசிஐ ‘N காது K காது’ என்ற மோடில் தான் இருந்தது.
அதன்பிறகு, பலத்த போட்டிக்கு இடையே ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு அந்த பலத்த போட்டியை கொடுத்தது சேவாக் தான். ஒருவேளை சேவாக் கோச்சாகி இருந்தால், அணியில் பூகம்பமே வெடித்திருக்கும்.
எது எப்படியோ, ரசிகர்களுக்கு தேவை நல்ல என்டர்டெயின்மண்ட்.. அதைத் தொடர்ந்து அளிக்கும் பட்சத்தில் கேப்டனுக்கும், கோச்சுக்கும் பிரச்சனை இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.