Top 5 Sports Moments: உருக வைத்த சுனில் சேத்ரி... கதற விட்ட சிஎஸ்கே...! 2018ன் முக்கிய தருணங்கள்

Top 5 Sports Moments in India: 'கோல்டன் ட்வீட்' என்று ட்விட்டர் இந்தியா கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தனர். 

Biggest Sports Moments in India: 2018ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறோம். வாழ்வில் நல்லவை, கெட்டவை என பல மொமன்ட்ஸ்களை இந்தாண்டு நமக்கு கொடுத்திருக்கும். அப்படி, இந்தியளவில் விளையாட்டுத் துறையில் அரங்கேறிய ஐந்து முக்கிய தருணங்களை இங்கே பகிர்கிறோம்,

5, U-19 உலகக் கோப்பை வெற்றி

இந்தாண்டு தொடக்கத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டுத் தருணம் நிச்சயம் இதுவாகத் தான் இருக்க முடியும். நியூசிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக U19 கோப்பையை வென்றது. குறிப்பாக, அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல், அனைத்து எதிரணிகளையும் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை புரிந்தனர் இந்திய அணியின் இளம் சிங்கங்கள். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில், இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

4, முகமது ஷமி மீதான கள்ளத் தொடர்பு புகார்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மிக மோசமான காலக்கட்டம் நிச்சயம் இதுவாகத் தான் இருக்க முடியும். மோசமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட!. கள்ளத் தொடர்பு, மேட்ச் ஃபிக்ஸிங், கொலை முயற்சி, வேறு திருமணம் செய்ய முயற்சி, தேசத் துரோகம் என ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் வரிசையாக புகார்களை அடுக்கினார். இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த அனைவரையும் இந்த விவகாரம் அதிர வைத்தது.

இதைத் தொடர்ந்து, பிசிசிஐ-ன் ஊழல் தடுப்புப் பிரிவு, ஷமி மீதான மேட்ச் ஃபிக்ஸிங் புகார் குறித்து விசாரணையில் இறங்கியது. அதில், ஷமி குற்றமற்றவர் என தெரிய வர, நிம்மதியடைந்தது கிரிக்கெட் உலகம். ஆனால், ‘கஜா’ புயல் போல் இச்சம்பவம் விளையாட்டு உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டுச் சென்றது.

3, முதன் முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று பெருமை சேர்த்த பி.வி.சிந்து

சீனாவில் இந்தாண்டின் இறுதியில் நடைபெற்ற ‘உலக டூர் ஃபைனல்ஸ்’ பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக ‘உலக சாம்பியன்’ பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தார். இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் கைப்பற்றாத ‘உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார் இந்த ஹைதராபாத் புயல்.

2, கம் பேக் கொடுத்து சாம்பியனான சீனியர் சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல்-லில் இரண்டாண்டு தடைக்குப் பிறகு இந்தாண்டு மீண்டும் களமிறங்கிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. தொடருக்கு முன்பு நடந்த ஏலத்தில், சென்னை அணியில் எடுக்கப்பட்ட வீரர்களில் பெரும்பாலானோருக்கு 30 வயதுக்கு மேல் இருந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ‘சென்னை சீனியர் கிங்ஸ்’ அணி என சமூக தளங்களில் ட்ரோல் செய்தனர்.

ஆனால், தொடரில் அனைத்து அணிகளையும் பந்தாடிய சிஎஸ்கே, செம கேஷுவலாக இறுதிப் போட்டியை வென்று கோப்பையை அலேக்காக தூக்கியது.

1, சுனில் சேத்ரியின் உருக்கமான வேண்டுகோள்

இந்தாண்டின் மிக முக்கியமான, உருக்கமான தருணம் என்றால், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டரில் பதிவிட்ட ‘வேண்டுகோள்’ வீடியோ தான்.

அந்த வீடியோவில் “கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். தரமில்லாத கால்பந்தாட்டத்தைப் பார்த்து உங்களது நேரத்தை வீணாக்க விரும்ப மாட்டீர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இங்கு ஐரோப்பிய தரம் இல்லை. ஆனால், நாங்கள் உங்களது நேரத்தை பயனளிக்கும் விதமாக எங்களால் முடிந்தவற்றை செய்கிறோம்.

இந்திய கால்பந்தின் மீது கடைசி நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அல்லது நம்பிக்கையே இல்லாதவர்கள் மைதானத்தில் வந்து எங்களை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன். மைதானத்துக்கு வந்து எங்களை கிண்டல் செய்யுங்கள், விமர்சியுங்கள், உற்சாகப்படுத்துங்கள். ஆனால், இந்திய கால்பந்து அணிக்கு நீங்கள் தேவை” என்று தனது உருக்கமான வேண்டுகோள் வைக்க, அடுத்த மேட்சில் ஹவுஸ்ஃபுல்லானது ஸ்டேடியம்.  கால்பந்து என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட மைதானத்தை நோக்கி படையெடுக்க, இந்தியா அந்தப் போட்டியில் அபாரமாக வெற்றியும் பெற்றது.

சுனில் சேத்ரி பதிவிட்ட அந்த வேண்டுகோள் ட்வீட் தான் இந்தியாவில் ட்விட்டரில் இந்த வருடம் அதிகம் ரீ டிவீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும். ‘கோல்டன் ட்வீட்’ என்று ட்விட்டர் இந்தியா அதனை கௌரவப்படுத்தியது. 59,865 பேர் அதனை retweet செய்தார்கள்.

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் சுனில், “இப்படி ஆதரவு அளித்தால், உயிரையும் கொடுப்போம்” என்று உருக, இதைவிட விளையாட்டின் சிறந்த தருணம் இந்தியாவுக்கு இந்தாண்டு என்னவாக இருக்க முடியும்?.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close