தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது பிளே ஆஃப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற சேப்பாக் அணி கேப்டன் ராஜகோபால் சதீஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 1 ரன்னிலும், தலைவன் சற்குணம் 11 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றினார்கள். ஒருபக்கம் கார்த்திக் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆண்டனி தாஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 27 ரன்கள் எடுத்தார். கார்த்திக்கும் 33 ரன்னில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டும் எடுத்தது.
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய தூத்துக்குடி அணியில், தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆரம்பம் முதலே தனது வாணவேடிக்கையை காட்ட ஆரம்பித்துவிட்டார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய சுந்தர், 36 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். கௌஷிக் 9 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், சுந்தரின் அனல் பறக்கும் ஆட்டத்தால், தூத்துக்குடி அணியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.அபினவ் முகுந்த் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இதனால், 12.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 118 ரன்கள் எடுத்து தூத்துக்குடி அணி வென்றது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி அணி முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் 2-வது பிளே-ஆஃப் சுற்றில் வெல்லும் அணியுடன், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.