லண்டனில் நேற்று நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இந்திய அணி இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. வெற்றிக்கு அருகில் வந்து, கடைசி நேர பதற்றத்தில் கோப்பையை இந்தியா நழுவ விட்டது. இதனால், நான்காவது முறையாக இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அதேசமயம், முதன்முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
இருப்பினும், இந்திய மகளிர் அணிக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. பிரதமர் மோடி முதல் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரிட்டன் தொலைக்காட்சி பிரபலமும், பத்திரிக்கையாளருமான பியர்ஸ் மோர்கன் என்பவர், இந்திய மகளிர் அணியின் தோல்வியையும், முன்னாள் இந்திய வீரருமான சேவாக்கையும் கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீடில், சேவாக்கை பார்த்து "நீங்கள் ஓகே வா?" என்று கேட்டுள்ளார்.
இதற்கு பின்னர் ஒரு கதை இருக்கிறது. முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இதே பியர்ஸ் மோர்கன், ஒரு நக்கலான சவாலுக்கு சேவாக்கை அழைத்திருந்தார். அதில், "ஒலிம்பிக்கில் இந்தியா அடுத்த தங்கம் வெல்லும் முன், இங்கிலாந்து அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையை வென்றுவிட்டால், நீங்கள் என் அறக்கட்டளைக்கு 10 லட்சம் ருபாய் தர வேண்டும். இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா?" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Ahem, @virendersehwag... pay up! pic.twitter.com/oRLPxcEd9z
— Piers Morgan (@piersmorgan) July 23, 2017
இந்த நிலையில், நேற்று மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றதை அடுத்து, சேவாக்கை சீண்டும் விதமாக, "பணம் செலுத்த தயாரா?" என்கிற ரீதியில் ட்வீட்டியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள சேவாக், "தோல்வியாக இருந்தாலும் கூட, நானும் ஒட்டுமொத்த இந்தியாவும், எங்கள் வீராங்கனைகள் குறித்து பெருமைப்படுகிறோம். நாங்கள் சிறப்பாக போராடினோம். இன்னும் வலிமையாக நாங்கள் மேம்பட்டு இருக்கிறோம். மாற்றத்திற்காக மகிழுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிப்பிடும் விதமாக சேவாக் "மாற்றத்திற்கு மகிழுங்கள்" என்று நக்கல் கலந்த உண்மையை, உரைக்கும் விதமாக மோர்கனுக்கு பதில் அளித்தார்.
Me and all of India prouder even in this loss than you can ever be mate.We fought well &will only get better & stronger.
Enjoy for a change! https://t.co/Dv1gn2jpWn
— Virender Sehwag (@virendersehwag) July 23, 2017
இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சேவாக்கின் இந்த ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்துள்ளனர். அதோடுமட்டுமில்லாமல், பியர்ஸ் மோர்கனை ட்விட்டரில் ரசிகர்கள் சரமாரியாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.