வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் எட்டு நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி, நேற்று (புதன்) இரவு இங்கிலாந்து கிளம்பி சென்றது. ஆனால், இதில் ரோஹித் ஷர்மா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் மட்டும் செல்லவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
தன்னுடைய உறவினர் திருமணத்திற்கு செல்லவிருப்பதால், சில நாட்கள் விடுமுறை வேண்டும் என ரோஹித் பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளதால், அதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால், ரோஹித் நேற்று அணியினருடன் செல்லவில்லையாம்.
அதேசமயம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு வீரர் கேதர் ஜாதவின் விசா இன்னும் அவருக்கு கிடைக்கவில்லையாம். இதனால், விரைவில் அவரது விசாவை க்ளீயரன்ஸ் செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் உயர் ஆணையத்திடம் பிசிசிஐ வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்நிலையில், வரும் வெள்ளியன்று அவர் இங்கிலாந்து கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ உயரதிகாரி அளித்துள்ள பேட்டியில், "நீண்ட நாட்களுக்கு முன்னரே, ரோஹித் தனது விடுமுறை குறித்து வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் அதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது. ஜாதவை பொறுத்தவரை அவருடைய விசா க்ளீயரன்ஸ் ஆகிவிடும் என எதிர்பார்த்தோம். ஆனால், நேற்று அவரால் இந்திய அணியினருடன் இணைந்து செல்ல முடியவில்லை. தற்போது அவரது விசா க்ளீயர் செய்யப்பட்டுவிட்டது. அவர் வெள்ளியன்று கிளம்புவார் என தெரிகிறது. இரு வீரர்களும் மே 28-ஆம் தேதி நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவார்கள்" என்று கூறினார்.
சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கும் இந்திய அணியின் விவரம்:-
ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜின்க்யா ரஹானே, மஹேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.