scorecardresearch

இன்று தொடங்குகிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ்! நேருக்கு நேர் மோதுவார்களா ஃபெடரர், நடால்?

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்குகிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ்! நேருக்கு நேர் மோதுவார்களா ஃபெடரர், நடால்?

அமெரிக்க ஓபன் ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டென்னிஸ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கொண்ட அமெரிக்க ஓபன், வரும் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த சீசனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினின் ரஃபெல் நடால் ஆகியோரில் ஒருவருக்கு பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகள் எல்லாம் சரியாக அமைந்தால் ஃபெடரரும், நடாலும் அரைஇறுதியில் சந்திக்க வேண்டி இருக்கும். ரசிகர்களுக்கும் அது சூப்பர் விருந்தாக அமையும்.

இருப்பினும், முன்னாள் சாம்பியனும், 2-ஆம் நிலை வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இடுப்பு பகுதி காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் தன்னால் விளையாட இயலாது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகிய முன்னணி வீரர்களும் காயத்தால் பின்வாங்கி விட்டனர்.

இதன் காரணமாக இந்தத் தொடரில் களமிறங்கியுள்ள இளம் நட்சத்திரங்கள் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) மற்றும் மரின் சிலிச் (குரோஷியா), சோங்கா (பிரான்ஸ்), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா) உள்ளிட்டோர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சிமோனா ஹாலெப் (ருமேனியா), விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகிய 8 பேர் இடையே போட்டி நிலவுகிறது.

ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாதங்கள் தடையை அனுபவித்த பிறகு, முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரிய ஷரபோவா (ரஷியா) முதல் சுற்றில், 2-ம் நிலை நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் மோத இருக்கிறார்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.345 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.23½ கோடி பரிசுத்தொகையும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிப்போர் ரூ.11½ கோடியை பரிசாக பெறுவர். முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Us open 2017 preview major absences diminish spectacle