அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸை வீழ்த்தி அமெரிக்காவின் லான் ஸ்டீபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். கிராட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த அமெரிக்க ஓபன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இறுதிப்போட்டியில், விளையாடிய இரு வீராங்கனைகளும் அமெரிக்க வீராங்கனைகள் தான். ஆகவே, ரசிகர்கள் மத்தியில் யார் வெல்லப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. முன்னதாக ஸ்டீபென்ஸ் அரையிறுதிப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை வெற்றி கண்டார் என்பது கவனிக்கத்தக்கது.
மேடிசன் கீஸ் மற்றும் லான் ஸ்டீபென்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். அதோடு, இருவருமே நெருங்கிய தோழிகள் ஆவர். இளம் வீராங்கனையான ஸ்டீபென்ஸ், மேடிசன் கீஸ்க்கு ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால், 6-3 மற்றும் 6-0 என்ற நேர் செட்டில் ஸ்டீபென்ஸ் வெற்றிபெற்று, அமெரிக்க ஓபன் பட்டத்தை ருசித்தார். முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்ற ஸ்டீபன்ஸ்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வெற்றி குறித்து ஸ்டீபென்ஸ் பேசும்போது: ஜனவரி 23-ம் தேதி தான் நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். அந்த சமயத்தில், நான் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லப்போகிறேன் என்று கூறியிருந்தால், அது உறுதியாக சாத்தியம் இல்லை என்று தான் கூறியிருப்பேன். மேடிசன் எனது நெருங்கிய தோழியாவார். மேடிசனுடன், விளையாடியது என்பது வியக்கத்தக்க சம்மபம் என்று கூறினார்.