Australian Cricketer Usman Khawaja brother arrested in Sydney : தனது நண்பனை திட்டம் போட்டு போலி தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலன் கவாஜா சிட்னி புறநகர் பகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வருகிற டிசம்பர் 6ம் தொடங்க இருக்கும் இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார் உஸ்மான் கவாஜா.
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட இவருக்கு, அர்சலன் கவாஜா (26) என்ற சகோதரர் உள்ளார். அர்சலன் மற்றும் இலங்கையில் பிறந்த அவரது பல்கலைக்கழக நண்பர் கமீர் நிஜாமுதீன் என்பவருக்கும் ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பான சிறிய மோதல் நடந்துள்ளது.
இதில் நிஜாமுதீன் மீது கோபம் கொண்ட அர்சலன், ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் டர்ன்புல்லை கொலை செய்ய முகமது கமீர் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். மேலும் அது குறித்து நிஜாமுதீன் டைரியிலும் கொலைத்திட்டத்தையும் எழுதிவைத்தார் அர்சலன். இதனால் நிஜாமுதீன், ஆஸ்திரேலியா போலீசாரால் ஆகஸ்ட் 30ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நிஜாமுதீனிடம் தொடர்ந்து பல வாரங்கள் விசாரணை நடத்திய போலீசார், டைரியில் உள்ள கையெழுத்துடன் நிஜாமுதீன் கையெழுத்து ஒத்துப்போகவில்லை என்பதை அறிந்து அவரை எந்தவித வழக்கும் இல்லாமல் விடுவித்தனர்.
தொடர்ந்து விசாரித்து வந்த நியூ சவுத் வேல்ஸ் போலீசாருக்கு அர்சலன் கவாஜா மீது சந்தேகம் ஏற்பட்டது. டைரியில் இருந்த கையெழுத்தை அர்சகான் கையெழுத்துடன் ஒப்பிடும்போது அது சரியாக பொருந்தியது. தனிப்பட்ட விரோதம் காரணமாக தாம் தான் நிஜாமுதீனை சிக்கவைத்ததாக போலீசாரிடம் அர்சலன் கவாஜா ஒப்புக்கொண்டார்.
மேற்கு சிட்னியில் உள்ள பாரமாட்டா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள அர்சலன் கவாஜாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா நிருபர்களிடம் கூறுகையில் "வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் தற்பொழுது எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. இந்த நேரத்தில் எனது மற்றும் எங்களது குடும்ப தனியுரிமையை மதித்து நீங்கள் செயல்பட கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.