வரலாற்றில் முதன் முதலாக....! காதலர் தின ஆச்சர்ய கிரிக்கெட் போட்டிகள்!

இந்த போட்டியில் விளையாடிய பல வீரர்கள் நியூசிலாந்து சர்வதேச அணியில் இடம் பிடித்து சாதனை நாயகர்களாக விளங்கினர்

ANBARASAN GNANAMANI

பிப்ரவரி 14… காதலர்களுக்கு மிகவும் பிடித்த நாள், பெற்றோர்கள் மிகவும் உஷாராக இருக்கும் நாள், சிங்கிள்ஸ் அதிகம் வயிற்றெரிச்சல் படும் நாள்… என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

சரி! கிரிக்கெட் ரசிகர்களுக்கு காதலர் தினத்தின் என்ன ஸ்பெஷல் இருக்கிறது? ஸ்பெஷல் ஆக்கிடுவோம்..! காதலர் தினத்தன்று நடந்த சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிகள் குறித்து இங்கே பார்ப்போம்.

1896

தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ஒருநாள் போட்டிகளில் இந்தியா தென்னாப்பிரிக்காவை வச்சு செய்திருக்கிறது எனலாம். இந்த செய்தி, மேலும் தென்னாப்பிரிக்காவை சோகத்திற்கு கொண்டுச் செல்ல உள்ளது. ஆம்! போர்ட் எலிசபெத்தில் 1896ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா 30 ரன்களுக்கு சுருண்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோர் இதுதான். உலகளவில் இது இரண்டாவது குறைந்தபட்ச டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்.

2003

இந்த ஆண்டு காதலர் தினத்தன்று நடந்த ‘2003 உலகக் கோப்பை’ லீக் கிரிக்கெட் போட்டியில், இலங்கை, வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில், வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய, முதல் ஓவரை வீசிய சமிந்தா வாஸ், முதல் மூன்று பந்தில் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாது, அதே ஓவரில் 4வது விக்கெட்டையும் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

1982

இந்தாண்டு தான் உலகின் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற எட்டாவது நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, பிப்ரவரி 14 அன்று கொழும்புவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தனது முதல் ஒருநாள் வெற்றியை பதிவு செய்தது இலங்கை. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அர்ஜுனா ரணதுங்கா இந்தப் போட்டியில் தான் முதன் முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 215 ரன்கள் எடுத்தது. இலக்கை சிறப்பாக துரத்திய இங்கிலாந்து 203 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை நெருங்கியது. ஆனால், அடுத்த 10 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோற்றது. இதன் மூலம், தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வெற்றியை ருசித்தது இலங்கை.

1995

இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த ‘ஷெல் டிராபி கிரிக்கெட்’ போட்டியில், கேண்டர்பெரி அணி 496 & 476/2 dec ரன்கள் குவித்தும் வெல்லிங்டன் அணியிடம் தோற்றது. வெல்லிங்டன் ஸ்கோர் – 498/2 dec & 475/4. ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சராசரியாக 108 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. மொத்தம் 7 சதங்கள் குவிக்கப்பட்டது. இதற்குப்பின், இந்த ஒரேயொரு போட்டியில் விளையாடிய பல வீரர்கள் நியூசிலாந்து சர்வதேச அணியில் இடம் பிடித்து சாதனை நாயகர்களாக விளங்கினர். ஹார்ட்லான்ட், ஹரிஸ், லாதம், கிரிஸ் கெய்ர்ன்ஸ், நாதன் ஆஸ்லே, மேக் மில்லன், க்ரோ, ப்ரீஸ்ட், லார்சன் ஆகிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடியவர்களே.

×Close
×Close