ஐபிஎல் ஏலம் 2019: வசூல் சக்கரவர்த்தியான வருண் சக்கரவர்த்தி! அதிக தொகைக்கு விலை போன தமிழக ஸ்பின்னர்

மதுரை பாந்தர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி 'யாருப்பா இவர்?' என்று அனைவரையும் கவனிக்க வைத்தார்

நடைபெற்று வரும் 2019 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில், 8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ‘Mystery Spinner’ என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வருண், நடப்பாண்டில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த வருண் சக்கரவர்த்தி?

13 வயதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே, கிரிக்கெட் மீதிருந்த காதலால் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். ஆனால், சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் Architecture படிப்பை தேர்ந்தெடுத்த பிறகு, கிரிக்கெட்டை அவர் தியாகம் செய்ய நேர்ந்தது. படித்து முடித்தவுடன், 2 ஆண்டுகள் ஆர்கிடெக்ட் துறையில் பணியாற்றிய பிறகு, மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால், இம்முறை பேஸ் பவுலராக.

சில கிளப் அணிகளுக்காக ஆடிக் கொண்டிருந்த வருண், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் கிரிக்கெட்டை விட்டு விலகினார். ஆனால், சில காலம் கழித்து மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த வருண், ஸ்பின்னராகவே தனது பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு, அவரது கேரியர் கிராஃப் ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியது. கிளப் போட்டிகளில் விளையாடிய போது, ஏழு விதமான வேரியேஷன்களில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஐபிஎல்-லில் சிஎஸ்கே நெட் பயிற்சியில் அவருக்கு பந்து வீச வாய்ப்புக் கிடைத்தது. அப்போது, பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பந்து வீசி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.

அந்த அனுபவத்தை இந்தாண்டு நடந்து முடிந்த TNPL தொடரில் பயன்படுத்திக் கொண்ட வருண், மதுரை பாந்தர்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி ‘யாருப்பா இவர்?’ என்று அனைவரையும் கவனிக்க வைத்தார். அதன்பிறகு அக்டோபரில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றி, குரூப் பிரிவில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரானார்.

கிரிக்கெட்டை ஒரு பொழுதுபோக்காக எண்ணி விளையாடத் தொடங்கிய வருண் சக்கரவர்த்தி, இன்று ஒரே நாளில் கோடிக் கணக்கில் சம்பாதித்து வசூல் சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். அதுவும், நம் தமிழகத்தில் இருந்து.

வாழ்த்துகள் வருண்!

மேலும் படிக்க – ஐபிஎல் ஏலம் 2019 லைவ் அப்டேட்ஸ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close