Advertisment

ஐரோப்பிய நாடுகளுக்கு ஹாக்கி கற்றுக் கொடுத்த இந்தியா: தயான் சந்த் பேசிய அரிய வீடியோ

Former indian hockey captain Major Dhyan Chand narrates in a video that how Europeans learned the art of dribbling from Indian players Tamil News: ஹாக்கியில் மாயாஜாலம் காட்டும் வீரராக திகழ்ந்த தயான் சந்த், ஐரோப்பிய நாடுகள் இந்திய வீரர்களிடம் இருந்து ஹாக்கி கற்றுக்கொள்ள எவ்வாறு கடுமையாக உழைத்தன என்பது குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
Martin Jeyaraj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Video: Major Dhyan Chand on how Europeans learned the art of dribbling from Indian players

Major Dhyan Chand Tamil News: சர்வதேச ஹாக்கி அரங்கில் இந்தியாவின் கொடி வானுயர பறக்க பாதையை உருவாக்கியவர் மேஜர் தயான் சந்த் என்றால் நிச்சயம் மிகையாகாது. பிரிட்டன்- இந்தியா அணியில் இடம்பிடிருந்த இவர், ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை தங்கம் வெல்ல பெரும் பங்காற்றி இருந்தார். இவரின் ஆட்டத் திறனுக்காக இவரை 'மந்திரவாதி' என்றும் அழைப்பார்கள்.

Advertisment

ஹாக்கி மட்டையில் மாயாஜாலம்

தயான் சந்த், உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சமேஷ்வர் தத் சிங் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவருடைய குடும்பமே ஒரு ராணுவ குடும்பமாக இருந்ததால் அவர் தனது 16வது வயதில் ராணுவத்தில் இணைந்தார். ராணுவப் பணியில் சேர்ந்த அவருக்கு ஹாக்கி விளையாட்டின் மீது காதல் ஏற்பட்டது. அவருடைய காதலை காலையில் ராணுவம் பணிக்கு பிறகு இரவில் விளக்குகள் இல்லாத மைதானத்தில் நிலவின் ஒளியில் பயிற்சி செய்து வெளிப்படுத்தி இருந்தார்.

'சந்த்' என்றால் நிலவு என பொருள்படும். நிலவின் ஒளியில் பயிற்சி பெற்று வந்த தயானுக்கு அந்த புனைபெயர் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து தனது இடைவிடாத பயிற்சியால் ராணுவ அணியில் தேர்வு செய்யப்பட்ட இவர், களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் கவனம் ஈர்த்தார். இதனால் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.

publive-image

கிடைத்த வாய்ப்பை இவர் பிடித்து கொண்டாரோ இல்லையோ மைதானங்களில் இவர் கடத்தி சென்ற பந்து அவரைப் பற்றிக்கொண்டது. பந்தை கடத்துவதில் (டிரிப்ளிங்) மன்னனாகவும், மாயாஜாலம் காட்டுபவராகவும் இவர் திகழ்ந்தார். இவரின் ஆட்டத்தை பார்க்கவே ஹாக்கி மைதானங்களில் கோடான கோடி ரசிகர்கள் குவிவார்கள். அந்த அளவிற்கு வித்தை காட்டக்கூடியவர்.

தயான் சந்த் பந்தை கடத்திச் செல்லும் போது பந்து ஹாக்கி மட்டையில் ஒட்டிக்கொண்டது போன்று காட்டியளிக்குமாம். ஒரு ஆட்டத்தின் போது, அவரின் மட்டையில் எதாவது பசை தடவி இருப்பபார் என சந்தேகித்த நடுவார்கள், அவரது மட்டையை உடைத்து பார்த்தார்களாம்.

இதேபோல், அவர் ஒரு மைதானத்தில் கோல் அடித்தபோது பந்து ஒரு நூல் இடைவெளியில் கோல் போஸ்டை தாண்டி சென்றுள்ளது. அப்போது போஸ்டின் நீளத்தை அளக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. போஸ்டின் நீளம் அளக்கப்படுகையில் அது சரியாக ஒருநூல் அளவு தான் குறைவாக இருந்துள்ளது.

பந்தை துல்லியமாக அடிக்கலாம், அதற்கு இவ்வளவு துல்லியமாகவா அடிப்பது என வியக்கும் அளவிற்கு வித்தை காட்டி இருக்கிறார் தயான் சந்த். இவர் நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக தேர்வான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 192 கோல்களை அடித்தது. அதில் இவர் மட்டும் 100 கோல்களை அடித்து இருந்தார்.

publive-image

உலகம் இவரின் ஹாக்கி திறனைப்பார்த்து வியந்த தருணத்தில், இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் அவரின் குடையை கொடுத்து விளையாட சொல்ல, அதிலும் கோல் அடித்தது மேலும் வியப்பை ஏற்படுத்தினார் தயான் சந்த்.

ஹாட்ரிக் ஒலிம்பிக் தங்கம்

1928ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் நடந்தது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. சொந்த மண்ணில் உற்சாகத்தோடு களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு சோக நாளாக மாற்றி இருந்தனர் இந்திய வீரர்கள். இந்த போட்டியில் நெதர்லாந்தை ஒரு கோல் கூட அடிக்க விடாத இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று, ஒலிம்பிக் தங்கத்தை முதல் முறையாக முத்தமிட்டனர்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்தியா அடித்த 3 கோல்களில் தயான் சந்த் மட்டும் இரண்டு கோல்கள் அடித்து இருந்தார். இதே உத்வேகத்துடன் அடுத்த ஒலிம்பிக்கிலும் (லாஸ் ஏஞ்சல்ஸ் - 1932) களமிறங்கிய இந்திய வீரர்கள், இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இந்திய அணி 24 கோல்கள் அடிக்க அமெரிக்க ஆறுதலுக்கு ஒரு கோல் அடித்து இருந்தது. இந்தியா அடித்த 24 கோல்களில் தயான் சந்த் 8 கோல்களும், அவரது தம்பி ரூப் சிங் 10 கோல்களும் அடித்தனர்.

தனது 31வது வயதில் 1936ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் தயான் சந்த் மூன்றாவது முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினார். இம்முறை வீரராக மட்டுமல்லாமல் ஒரு கேப்டனாகவும் அணியை வழிநடத்த தயாரானார். துரதிஷ்டவசமாக ஜெர்மனி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 1-4 என்று தோல்வி அடைந்து இருந்தது.

publive-image

எனினும், இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி ஜெர்மனியை மீண்டும் சந்தித்தது. ஆரவாரமாக தொடங்கிய இந்த இறுதிப் போட்டியை காண ஹிட்லர் வந்திருந்தார். அவர் மைதானத்தில் நுழைந்த போது 'குண்டுசி விழுந்தா சத்தம் கேட்கணும்' என்று கூறுவதற்கு ஏற்ப அமைதி நிலவியது. குழுமிருந்த மக்கள் அவருக்கு வணக்கம் செலுத்த போட்டி தொடங்கியது.

அனல் பறக்க நடந்த அந்த போட்டியில் மக்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர். ரத்த வியர்வையில் வீரர்கள் நனைத்திருந்தனர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 கோல்களை அடித்தது. ஜெர்மனி ஒரே ஒரு கோல் மட்டும் அடித்து தோல்வி கண்டது. அசத்தல் வெற்றியை ருசித்த இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை வாகை சூடியது.

வைரலாகும் அரிய வீடியோ

இந்நிலையில், ஹாக்கியில் மாயாஜாலம் காட்டும் வீரராக திகழ்ந்த தயான் சந்த் தனது ஒலிம்பிக் அனுபவங்களை பகிரும் வீடியோ ஒன்று இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

1963 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடந்தது அப்போது ​​பிரசார் பார்திக்கு மேஜர் தயான் சந்த் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் இந்திய வீரர்களிடம் இருந்து ஹாக்கி பந்தை எப்படி டிரிப்ளிங் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு கடுமையாக உழைத்தன என்பது குறித்து பேசியுள்ளார்.

“ஐரோப்பியர்கள் டிரிப்ளிங் கலையை இந்திய ஹாக்கி வீரர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர். 1963 ஆம் ஆண்டு பெர்லினில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருந்து புகைப்படக் கலைஞர்கள் இந்தியாவின் பயிற்சி அமர்வில் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் ஸ்லோ மோஷன், ஃபாஸ்ட் மோஷன் போன்றவற்றில் புகைப்படங்களை எடுத்து மாலையில் தங்கள் அணியினருக்கு காட்டினார்கள்.

நமது வீரர்கள் எப்படி டிரிப்லிங் செய்கிறார்கள் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகள், கால்கள் எங்கே, தலையின் நிலை என்ன. அவர்கள் டிரிப்ளிங் கலையை நீண்ட காலத்திற்கு கற்றுக்கொண்டனர். அதை தொடர்ந்து பயிற்சியும் செய்த்தனர்.” என்று தயான் சந்த் அந்த வீடியோவில் விவரிக்கிறார்.

ஆனால், தற்போதுள்ள நவீன ஹாக்கி தயான் சந்த் காலத்தில் விளையாடிய விளையாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது. இந்த விளையாட்டில் ஐரோப்பியர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் பல தசாப்தங்களாக மிகவும் திறமையானவர்களாக மாறிவிட்டனர், அதே சமயம் மைதானத்தின் மாற்றம் உடற்பயிற்சி, வேகம், ஸ்டெமினா மற்றும் உடல் வலிமை ஆகியவற்றில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

மரியாதை

ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்த் கல்லீரல் புற்றுநோயால் பெரும் அவதிப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.

publive-image

தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தலைவர் அர்ஜுனா விருதுகள் மற்றும் பிற மரியாதைகளை வழங்குகிறார். இப்போது தயான் சந்தின் பெயரிலேயே ஒரு விருது வழங்கப்படுகிறது.

விளையாட்டில் வாழ்நாள் சாதனைக்கான விருதுக்கு அவரின் பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்டேடியம் மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி தயான் சந்தின் பெயரால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Hockey Indian Hockey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment