இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி; விராட் கோலி நிகழ்ச்சியில்......!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் பார்த்ததை ஊடகங்கள் பெரிய அளவில் செய்தியாக்கின

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மனித கடத்தலை தடுக்கும் பொருட்டு தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக, விராட் நேற்று (திங்கள்) மாலை நடத்திய இரவு விருந்தில், இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதே நிகழ்ச்சியில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவும் கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தனது கிங்ஃபிஷர் நிறுவனத்திற்காக இந்திய வங்கிகளில் வாங்கிய ரூ.9,000 கோடி (வட்டியுடன்) கடனை திருப்பிச் செலுத்தாததால், சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பித்துச் சென்றார். இதனால், இந்திய நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

ஆனால், அவர் அதனைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 4-ஆம் தேதி நடந்த இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை நேரில் கண்டு ரசித்தார். அதுவும் விஐபி கேலரியில் இருந்து…. எந்தவித பயமும் இன்றி போட்டியை பார்த்ததோடு மட்டுமில்லாமல், “இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் பார்த்ததை ஊடகங்கள் பெரிய அளவில் செய்தியாக்கியுள்ளன. இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில், அனைத்துப் போட்டிகளையும் நான் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். விராட் கோலி ஒரு உலகத் தரம் வாய்ந்த கேப்டன். வாழ்த்துகள் விராட்கோலி” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், விராட் கோலி நேற்று நடத்திய நிகழ்ச்சியிலும் மற்ற கிரிக்கெட் வீரர்களுடன் அவர் கலந்து கொண்டிருப்பது தற்போது தலைப்புச் செய்திகளாக உலா வருகின்றது. ஆனால், இந்த தலைப்புச் செய்திகளால் அவரது தலைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடுவதில்லை.

×Close
×Close