நான் ஹீரோவாகி இருக்க வேண்டியவன்! - விஜய் ஷங்கர் வேதனை

அவரது அந்த வார்த்தைகள் தான் அன்று என்னை நிம்மதியாக தூங்க வைத்தது

நிடாஹஸ் முத்தரப்பு டி20 தொடர் இறுதிப் போட்டி முடிந்து நாட்கள் வேக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தனது அடுத்தக்கட்ட பாதையை முன்னெடுத்து வைப்பதில் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறார் தமிழக வீரர் விஜய் ஷங்கர்.

இறுதிக் கட்டத்தில், முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரில் அவர் விடுத்த நான்கு பந்துகள் தான் அவரின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம். அதுமட்டுமின்றி, சமூக தளங்களில் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் அவரை சற்று வேதனைப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து விஜய் ஷங்கர் அளித்துள்ள பேட்டியில், “முக்கியமான தருணத்தில், ஐந்து முக்கியமான பந்துகளை நான் தவறவிட்ட சம்பவத்தில் இருந்து இன்னும் என்னால் மீண்டு வரமுடியவில்லை. சரி.. நான் முஸ்தாபிசூர் ரஹ்மான் வீசிய 18 வது ஓவரை வீணடித்து விட்டேன். அட்லீஸ்ட், கடைசி ஓவரிலாவது சிக்ஸர்கள் அடித்து, அணியை வெற்றிப் பெற வைத்திருக்க வேண்டும். அப்படி அடித்திருந்தால் கூட, என் மீதான விமர்சனங்கள் குறைந்திருக்கும், அல்லது வேறு மாதிரியாக போயிருக்கும். ஆனால், நான் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதில், என்னவொரு வேதனையெனில், இது போன்ற தருணங்களை எதிர்பார்த்து நான் கடுமையாக உழைத்து என்னை தயார் செய்து வைத்திருந்தும், அதை செய்து காட்ட முடியாமல் போனது தான்!.

பயிற்சியின் போது முஸ்தாபிசூர் ரஹ்மான் ஓவரை எதிர்கொள்வதற்கும், போட்டியின் போது சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதை அன்று தான் நான் உணர்ந்து கொண்டேன். வேறொரு நாளில், இதேபோன்றதொரு சூழ்நிலையில், அதே போன்ற பந்துகளை நான் திறம்பட எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால், அன்றைய நாள் எனக்கான நாளாக அமையாமல் போய்விட்டது.

முதல் மூன்று பந்துகளை விட்ட பொழுது, நான் கடுமையாக சிந்தித்துக் கொண்டிருந்தேன், ‘எப்படி இந்த பந்தை விட்டோம் என்று!’. ஆனால், நான் சிங்கிளாவது எடுத்திருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன். நானே அடிக்க வேண்டும் என்று நினைத்ததால் தான், இந்த அவப்பெயரை சந்தித்துள்ளேன். நான் களமிறங்கிய சில நிமிடங்களில் அவுட்டாகி இருந்தால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. நல்ல வாய்ப்பு கிடைத்தது. அடித்திருந்தால் ‘ஹீரோவாகி இருப்பேன்’. ஆனால், இப்போது வேதனையில் உள்ளேன்.

அன்றைய தினம், அனைவரும் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்க, நான் மட்டும் கதவை தாழிட்டுக் கொண்டு தனியாக எனது அறையில் இருந்தேன். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்த போது தினேஷ் கார்த்திக் நின்றிருந்தார். அவர் என்னிடம், “இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதே. அமைதியாக இரு. துக்கத்தை உனக்குள்ளேயே வைத்துக் கொண்டால், மீண்டும் மீண்டும் அதே தவறுகளை தான் நீ பிரதிபலிப்பாய்” என்றார். அவரது அந்த வார்த்தைகள் தான் அன்று என்னை நிம்மதியாக தூங்க வைத்தது.

சமூக தளங்களில் என் மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நண்பர்கள், நலம் விரும்பிகள் எனக்கு அட்வைஸ் செய்தனர். எப்படி ஆறுதல் கூறினாலும், எந்த பயனும் இல்லை. சமூக தளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு வீரராக என்னை தகவமைத்துக் கொள்ள, இது போன்ற விமர்சனங்கள் அவசியம் என நினைக்கிறேன்.

இப்போது நான் பாஸிட்டிவாக உள்ளேன். ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்திய அணியில் எனது வாய்ப்பு குறித்து நான் யோசிக்கவில்லை. ஐபிஎல்-ல் தான் எனது முழு கவனமும் உள்ளது” என்று விஜய் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close