பதக்கம் வேண்டாம்; இந்திய - சீன எல்லையில் அமைதி வேண்டும்: விஜேந்தர் சிங் உருக்கம்!

இதில், சீன வீரரை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை விஜேந்தர் சிங் தக்க வைத்துக் கொண்டார்.

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மும்பையில் நேற்றிரவு பலப்பரீட்சை நடத்தினார். இதில், சீன வீரரை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை விஜேந்தர் சிங் தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் ஜூல்பிகரிடம் இருந்த ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தையும் தட்டிப்பறித்து அசத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற விஜேந்தர் சிங், ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டம் தனக்கு வேண்டாம், இந்தியா-சீனா இடையே அமைதி நிலவினால் அதுவே எனக்கு போதும் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எனக்கு இந்த பதக்கம் வேண்டாம். ஏனெனில் இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நிலவுவதை நான் கொஞ்சம் கூட விரும்பவில்லை. இந்திய சீன எல்லையில் நிலவும் சூழல் மிகவும் மோசமாக உள்ளது.

பதக்கத்தை திரும்பி செலுத்துவதன் மூலம் இந்தியா சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்பினேன். சீன ஊடகங்களும், அந்நாட்டு மக்களும் இந்தச் செய்தியை நிச்சயம் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

இந்தியாவில் ‘டோக்லாம்’ என்றும், சீனாவில் ‘தொங்லாங்’ என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் தான் இந்தியா – சீனா இடையே தற்போது பதற்ற நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close