அன்பரசன் ஞானமணி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக புனேவில் நேற்று (அக்.27) நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதல் போட்டியில் வெற்றி, இரண்டாவது போட்டியில் டிரா, மூன்றாவது போட்டியில் தோல்வி என இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் சறுக்கலை சந்தித்து வருகிறது. அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டு ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. அடுத்தப் போட்டியிலும் வென்றால், வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்துகிறது என்று டிக்ளேர் செய்துவிடலாம்.
இந்த மூன்று போட்டியிலும் விராட் கோலி சதம் அடித்ததே, இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி கொள்ளும் விஷயமாகும்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த விராட் கோலி, "நாங்கள் நன்றாக பவுலிங் செய்தோம். 35 ஓவர்கள் வரை பிட்ச் சப்போர்ட் பண்ணவில்லை. 250-260 ரன்களைத்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கடைசி 10 ஓவர்களில் ரன்களை கொடுத்து விட்டோம். அதுதவிர பவுலிங் நன்றாகவே இருந்தது.
ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆடும்போது கூடுதல் பவுலிங் தெரிவு இருந்தது. அடுத்தப் போட்டியில் கேதர் ஜாதவ் விளையாடுவார். அவர் வந்து விட்டால் இன்னும் கொஞ்சம் அணியில் சமநிலை ஏற்படும். எனவே, ஒருபவுலரை விட்டு விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கப்படாத கேதர் ஜாதவ், அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது சேர்க்கப்படவில்லை.
கேதர் ஜாதவ் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் அளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், "ஃபிட்னஸ் காரணமாகத் தான் கேதர் ஜாதவ் அணியில் சேர்க்கப்படவில்லை. போன முறையும் அவர் முழு உடற்தகுதியுடன் தான் வந்தார். ஆனால், விரைவில் காயத்தில் சிக்கி வெளியேற நேரிட்டது. ஒரு அணியை தேர்வு செய்ய எங்களுக்கென ஒரு முறை உள்ளது. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இதற்கு உடனே அதிருப்தி தெரிவித்த கேதர் ஜாதவ், "நான் ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்று தெரியவில்லை. எனது ஃபிட்னஸில் குறை என்றால் யோ-யோ டெஸ்ட்டில் எனக்கு ஏன் தேர்ச்சி சர்டிபிகேட் கொடுக்க வேண்டும்?" என்றார்.
பொதுவாக வீரர்கள், தேர்வுக் குழுவின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தால், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சம்பந்தப்பட்ட வீரரை எச்சரிக்கும். ஆனால், இம்முறை கேதர் ஜாதவை திடீரென அணியில் சேர்த்தது பிசிசிஐ. இது அவருக்கே அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாக இருந்திருக்கக் கூடும்.
கேதர் ஜாதவ் மட்டுமல்லாது, இதற்கு முன்னதாக முரளி விஜய் மற்றும் கருண் நாயர் கூட தேர்வுக் குழு குறித்து அதிருப்தி தெரிவித்து இருந்தனர். முன்னாள் வீரர் ஹர்பஜனும், 'இந்திய தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் குழப்பமாக உள்ளது. வெளிப்படைத் தன்மை இல்லை' என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் வீரர்களுக்கும், தேர்வுக் குழுவுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.
எப்படியோ, கேதர் ஜாதவுக்கு அணியில் மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தோல்விக்கு பிறகு பேட்டியளித்த விராட் கோலி, கேதர் ஜாதவ் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் என தெரிவித்து இருக்கிறார்.
தன்னை அணியில் சேர்க்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, அணிக்குள் சேர்க்கப்பட்டவர் கேதர் ஜாதவ். இப்போது தோல்வி என்றவுடன், அடுத்தப் போட்டியில் ஜாதவ் விளையாடுவார் என விராட் கோலி இப்போதே அறிவிக்கிறார்.
ஒருவேளை ஜாதவ் அதிருப்தி தெரிவிக்காமல் இருந்திருந்து, அணியில் சேர்க்கப்படாமல் போயிருந்தால், கோலி என்ன செய்திருப்பார்? பெஞ்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஜடேஜாவைத் தான் மீண்டும் அணியில் சேர்த்திருக்க வேண்டும். ஜாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படாமலேயே போயிருக்க வாய்ப்புள்ளது. இப்போது வசதியாக ஜாதவ் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் என கோலி கூறுகிறார்.
இந்த செயல்பாடுகள் மூலம், நம்மில் சில கேள்விகள் எழுவதை தடுக்க முடியவில்லை.
இந்திய தேர்வுக் குழுவினரிடம் தெளிவு உள்ளதா?
வெஸ்ட் இண்டீஸ், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடக் கூடிய அணி என்று தெரிந்திருந்தும், ஹர்திக் பாண்ட்யா காயத்தில் இருந்து இன்னமும் குணமடையவில்லை என்று தெரிந்திருந்தும் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவை அப்போதே ஏன் அணியில் சேர்க்கவில்லை?
கேதர் ஜாதவ் அதிருப்தி தெரிவித்தும் அவரை அணியில் சேர்த்தது ஏன்?
எங்கள் தேர்வுக்கென்று ஒரு முறை இருக்கிறது என்று கூறி, கேதர் ஜாதவ் நீக்கத்துக்கு விளக்கம் அளித்த தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், மீண்டும் கேதர் ஜாதவை அணியில் சேர்த்ததன் பின்னணி என்ன?
கேதர் ஜாதவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், முரளி விஜய்யையும், கருண் நாயரையும் நிர்வாகம் எச்சரித்தது ஏன்?
'முன்பு ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆடும்போது கூடுதல் பவுலிங் தெரிவு இருந்தது. தோனிக்கு பிறகு பாண்ட்யாவோ, ஜாதவோ இருந்திருந்தால் அணி சமநிலையாக இருந்திருக்கும்' என்று கேப்டன் விராட் கோலி கூறுகிறார். அப்படியெனில், கேப்டனுடன் ஆலோசனை நடத்தாமல் தான் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்களா?
அணித் தேர்வில் கேப்டன் விராட் கோலிக்கு உடன்பாடு உள்ளதா?
இப்படி பல கேள்விகள் இந்திய தேர்வுக் குழு மீது எழுகிறது.
தேர்வுக்குழுவின் செயல்பாடுகள் ஹர்பஜன் சொல்வது போல் உண்மையில் குழப்பமாகத் தான் உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.