தற்போதைய இந்திய அணியின் 'ரன் மெஷின்' என்றழைக்கப்படும் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையும் தனது நீண்ட நாள் காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை கடந்த டிசம்பர் 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இத்தாலியின் டஸ்கனி நகரில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
மிக காஸ்ட்லியாக நடந்த இத் திருமணத்தில் ஹிந்து மத வழக்கத்தின் படி, அனுஷ்காவை கரம் பிடித்தார் கோலி. கோலியை தங்களது நாயகனாக கனவு கண்டு கொண்டிருந்த பல இளம் பெண்களின் கனவில் இடி விழுந்தது. பலரும் தங்களது ஆதங்கத்தை சமூக தளங்களில் கொட்டித் தீர்த்து, பின் வேறு வழியின்றி, 'நல்லா இருங்க' என்று வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. இதனால், டிசம்பர் 21-ஆம் தேதி டெல்லியிலும், டிசம்பர் 26-ஆம் தேதி மும்பையிலும் என இரண்டு ரிசப்ஷன்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், மும்பையில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியை முடித்த பின்னர், அங்கு நடைபெறும் ரிசப்ஷனில் இந்திய வீரர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.
இந்த நிலையில், கோலியின் நெருங்கிய நண்பரும், பொறுப்பு கேப்டனுமான ரோஹித் ஷர்மா கோலி - அனுஷ்கா திருமணம் முடிந்த பின்னர், கோலிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில், கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த டிப்ஸ் அடங்கிய ஹேண்ட்புக்கை உனக்கு வழங்குகிறேன்' என ரோஹித் கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு இன்று பதில் அளித்துள்ள விராட் கோலி, "நன்றி ரோஹித்! அப்படியே இரட்டை சதம் எப்படி அடிக்க வேண்டும் ஹேண்ட்புக்கையும் அனுப்பி வைக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், 2-வது போட்டியில் ரோஹித் ஷர்மா, இரட்டை சதம் விளாசியிருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் ஷர்மாவின் 3-வது இரட்டை சதம் அதுவாகும். இதுவரை வேறு எந்தவொரு கிரிக்கெட் வீரரும் இச்சாதனையை படைத்ததில்லை.
இதை பாராட்டும் விதமாக, தனக்கும் எப்படி இரட்டை சதம் அடிக்க வேண்டும் என சொல்லித் தருமாறு கோலி, ரோஹித்திடம் கேட்டுள்ளார்.